“குழந்தைகளுக்கான துணி வாங்கணுமா… வாங்க… வாங்க…” என்று உரக்கக் கத்தியபடியே, ஏக்கமும் ஆவலுமாக வியாபாரத்தில் மும்முரமாக இருந்தார் கற்பகம்.
மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள், `எங்கேயோ பார்த்த முகமாக’ கற்பகத்தை ஒருசிலமுறை ஏற இறங்கப் பார்த்துச் செல்கின்றனர். ஆம், சில படங்களில் பார்த்த அதே பரிச்சய முகம்தான் இவர். சினிமா வாய்ப்புக்காக, `பேரழகன்’ படத்தில் `சினேகா’ என்ற மாற்றுத்திறனாளி ரோலில் தன்னை உருவகேலி செய்யச் சம்மதித்து, பலரையும் சிரிக்க வைத்தவர்தான் கற்பகம்.
காலம் நம்மை அழைத்துச் செல்லும் திசையை யாராலும் யூகிக்கவே முடியாது அல்லவா? அதனால்தான், தன் ஆரம்பகால தொழிலுக்கே திரும்பிவிட்டார் கற்பகம். 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வியாசர்பாடி மார்க்கெட்டில், காய்கறிகள், மளிகைப் பொருள்கள், ஜவுளி வியாபாரம் என சீசனுக்கு ஏற்ப தன் தொழிலை மாற்றிக்கொண்டவர், இப்போது குழந்தைகளுக்கான துணிகளை விற்பனை செய்துவருகிறார்.
சுழற்றியடித்த வறுமைக்கு எதிரான ஓட்டத்தில் தட்டுத்தடுமாறி, பாதி வாழ்க்கையைத் தாண்டிவிட்ட கற்பகம், எஞ்சிய வாழ்க்கைக்கான ஓட்டத்துக்குத் தவியாய் தவிக்கிறார். அவருடனான சந்திப்பில், தன் கணவரின் நினைவுகளிலிருந்து பேச ஆரம்பித்தவரின் உரையாடலில், ஜீவனே இல்லாத வெறுமையான உணர்வு.
“என் குடும்பத்துல நான் மட்டும்தான் உசரம் கம்மி. என்னை மாதிரியே என் வீட்டுக்காரர் ராஜாவும் குள்ளமானவர்தான். அதனாலதான் ரெண்டு வீட்டுலயும் எங்களுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சாங்க. என் விருப்பத்துக்கு எதிரா எங்க வீட்டுல எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுட்டதால, அவர்கிட்ட பட்டும்படாமதான் இருந்தேன். அவரா என் பக்கத்துல வந்து பேசினாலும் முகத்தைத் திருப்பிக்குவேன். புகுந்த வீட்டுல என் மனசே தங்கலை.
பொறந்த வீட்டுக்கே ஓடிடலாம்னு தவிச்சாலும், பஸ் ஸ்டாண்டுக்குப் போகக்கூட வழி தெரியாம வெள்ளந்தியா இருந்தேன். `எல்லோர்கூடவும் சகஜமா பேசலைனா உன்னைக் கொன்னுடுவோம்’னு உருட்டி மிரட்டி, கணவர் வீட்டுல படிப்படியா என் பயத்தைப் போக்கினாங்க. என் கணவரோட நல்ல மனசைப் புரிஞ்சுகிட்டேன். சினிமாவுல நடிச்சுகிட்டிருந்த அவர்கூட சேர்ந்து, குடும்ப கஷ்டத்தைச் சமாளிக்க சினிமா, சீரியல்கள்ல நானும் நடிக்க ஆரம்பிச்சேன்” என்பவரின் மகனும் உயரம் குறைவான மாற்றுத்திறனாளிதான்.
“நானும் என் வீட்டுக்காரரும் குள்ளமா இருந்ததால, உங்களுக்குப் பிறக்கிற குழந்தையும் குள்ளமா வளர வாய்ப்பிருக்குனு பலரும் சொன்னாங்க. கடவுள் விட்ட வழி எதுவா இருந்தாலும் ஏத்துக்கலாம்னு நாங்க தைரியமா இருந்தோம். முதல் பிரசவத்துல பொண்ணு ஆரோக்கியமா பிறந்தா. `பொண்ணு சராசரி உயரத்தோடு வளர்வா. அடுத்து பிறக்கிற குழந்தையும் இதே மாதிரி இருக்குமான்னு சொல்ல முடியாது. அதனால, ஒரு குழந்தையோடு கருத்தடை ஆபரேஷன் பண்ணிக்கோங்க’னு மருத்துவர்கள் உட்பட விவரம் தெரிஞ்ச சிலர் வலியுறுத்தினாங்க.
`குடும்பத்துக்கு ஆண் வாரிசு இல்லை. இன்னொரு குழந்தை இருந்தா நல்லாயிருக்கும்’னு என் மாமியார்சொன்னாங்க. டாக்டர்கள் சொன்னதுபோலவே ரெண்டாவதா பிறந்த பையன் எங்களை மாதிரியே உசரம் கம்மியா பிறந்துட்டான். நான் உசரம் கம்மியா இருக்கிறதால, கர்ப்பகாலத்துயும், ரெண்டு முறையுமே சிசேரியன் பிரசவம் நடந்ததாலயும் ரொம்பவே சிரமப்பட்டேன்” என்று மென்சிரிப்புடன் சொல்பவர், அந்தப் பிரசவ வலியிலிருந்து விரைவாக மீண்டு வந்தாலும், மீள முடியாத இரண்டு இழப்புகள், கற்பகத்தை வாழ்நாள் முழுவதும் கலங்கும்படியாகச் செய்திருக்கிறது.
அந்த வலி மிகுந்த நினைவுகளில் மூழ்கியவரைத் திசைத்திருப்ப, `பேரழகன்’ பட அனுபவங்களைக் கேட்டதும் கற்பகத்தின் முகத்தில் மலந்தது லேசான புன்னகை.
“அந்தப் படத்துல நடிச்சப்போ, மாற்றுத்திறனாளியா வேஷம் போட்டிருந்த சூர்யா சாரை என்னால நம்பவே முடியலை. அவர்கூட சேர்ந்து நடிக்க பயந்தேன். `நிஜமாவே இது சூர்யா சார்தான்’னு என் வீட்டுக்காரர்தான் நம்பவெச்சு என்னை சமாதானப்படுத்தினார். அந்தப் படத்துல என்னைக் கிண்டல் பண்றாங்கன்னு தெரிஞ்சும், அதை நான் பெரிசா எடுத்துக்கலை. ஏன்னா, அந்தப் படத்துல நடிக்கிறதுக்காகக் கிடைக்கிற சம்பளமும், அதை வெச்சு என் பசங்களை வளர்க்க வேண்டிய கடமையும்தான் அப்போ எனக்கு முக்கியமா பட்டுச்சு.
`பேரழகன்’ படம் வெளியான பிறகு, எங்க போனாலும் ‘சினேகா’னு சொல்லித்தான் என்னைக் கூப்பிடுவாங்க. ஒருமுறை சினிமா ஷூட்டிங்ல நடிகை சினேகா மேடத்தைப் பார்த்தேன். ஒரு ஹாய் சொல்லி சிரிச்சாங்க. அவரை நேர்ல சந்திச்சுப் பேச இதுவரைக்கும் வாய்ப்பே கிடைக்கலை. அந்தப் படத்துக்கு அப்புறமா சூர்யா சாரையும் பார்க்க முடியலை. சில மாசங்களுக்கு முன்பு, என் பையன் கல்யாணத்துக்கு அழைப்பிதழுடன் சூர்யா சாரை பார்க்கப் போனேன். அவர் வெளியூருக்குப் போயிருந்தார். கொஞ்ச நாள் கழிச்சு, அவர் சார்பா தபால் வழியே அஞ்சாயிரம் ரூபாய் நிதியுதவி கிடைச்சது. அவரை நேர்ல சந்திச்சுப் பேச ஆசைப்படுறேன். அதுக்கு யாருமே உதவ மாட்டேங்கிறாங்க” என்று ஏக்கத்துடன் கூறுபவர், சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
பல வகையிலும் முட்டிமோதியும் தன் கஷ்ட நிலைக்கு எவ்வித உதவியும் கிடைக்காத நிலையில், ஏதாவதொரு திசையிலிருந்து உதவிகள் கிடைத்துவிடாதா என்று ஏக்கத்துடன் காலத்தை நகர்த்திக்கொண்டிருக்கிறார் இவர்.
“சினிமா தொழில் எங்க குடும்பத்தோட பசியைப் போக்க உதவினதை நாங்க மறக்கலை. ஆனா, அந்தத் தொழில் இப்போ எங்களைக் கைவிட்டுச்சு. அதுகூட பரவாயில்லை. நடிகர் சங்கமும், முன்னணி நடிகர்களும்கூட எங்களைக் கைவிட்டுட்டாங்க. நலிந்த கலைஞர்களா என் கணவரும் நானும் கலங்கித் தவிச்சப்போ இந்தத் துறையிலேருந்து யாருமே எங்களைக் கண்டுக்கலை. சராசரியான உயரத்துடனும் உடல் வளர்ச்சியுடனும் இருந்திருந்தா, மூட்டை தூக்கியாச்சும் பிழைச்சுக்கலாம். அதுக்கும் எங்களுக்குக் கொடுப்பினை இல்லையே!
ராணுவத்துல வேலை செஞ்ச எங்கப்பாவின் இறப்புக்குப் பிறகு, அவர் சார்பா இதுவரை எங்களுக்கு பென்ஷன் பணம் கிடைக்லை. எங்ககிட்ட இல்லாத ஆவணங்களைக் கேட்டு அலைக்கழிக்கிறாங்க. அதுக்காகவும் எவ்வளவோ போராடிப் பார்த்தாச்சு. இதெல்லாம்தான் என்னை ரொம்பவே விரக்திக்குத் தள்ளுது. நடக்கிறது நடக்கட்டும்னு சொற்ப வருமானமே கிடைச்சாலும், வேற வழியில்லாம இந்த துணி யாவாரத்தைப் பண்ணிகிட்டிருக்கேன்” என்று அங்கலாய்ப்புடன் சொல்லி கண்ணீர் சிந்தியவர், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்தார்.
அவள் விகடனில் வெளியான கற்பகத்தின் விரிவான பேட்டியைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.