சமீபத்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 56,083 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 50.5 குற்ற விகிதம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான 31,000 புகார்கள் கடந்தாண்டு (2021) தேசிய மகளிர் ஆணையத்தால் (NCW) பெறப்பட்டன. 2014ஆம் ஆண்டிற்கு பிறகு, கடந்தாண்டுதான் அதிக புகார்கள் வந்துள்ளன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவை.
2020ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, 2021ஆம் ஆண்டில், பெண்களுக்கு எதிரான புகார்கள் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் 23 ஆயிரத்து 722 புகார்கள்தான் பெறப்பட்டன. 23,722 புகார்கள் பெறப்பட்ட 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்கள் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதிகாரப்பூர்வமாக NCW தரவுகளின்படி, 30,864 புகார்களில், அதிகபட்சமாக 11,013 புகார்கள் பெண்களின் உணர்ச்சி ரீதியாக கொடுமைப்படுத்துதல் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து 6,633 புகார்கள் குடும்ப வன்முறை தொடர்பாகவும், 4,589 புகார்கள் வரதட்சணை கொடுமை தொடர்பாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், நாளுக்கு நாள் அங்கு குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தில் மனநலன் பிறழ்ந்த ஒரு பெண்மணியை, பல ஆண்கள் சேர்ந்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
கடந்த செப். 24ஆம் தேதி, உத்தரப் பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில், பட்டப்பகலில், பல ஆண்கள் கும்பலாக சேர்ந்து அந்த பெண்ணை கொடூரமாக தாக்குகின்றனர். இரண்டு ஆண்கள் சேர்ந்து அந்த பெண்ணின் கால்களை பிடித்து இழுத்து மீண்டும் மீண்டும் தாக்குவது அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. அந்த பெண் வலியில் தன்னை விட்டும்விடும்படி கண்ணீர்விட்டு கதறியும், அந்த கும்பல் அவரை விடவில்லை. பலரும் அந்த சம்பவத்தை வீடியோ எடுத்த நிலையில், யாரும் அந்த கும்பலை தடுக்கவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அந்த பெண்ணை சம்பவ இடத்தில் இருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அந்த பெண் சிகிச்சையில் இருந்துவருகிறார் என்றும், அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மீரட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.