`தெறி’, `மெர்சல்’, `பிகில்’ படங்களின் மூலம் தன்னை கைதூக்கிவிட்ட விஜய்யை இந்திக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் இருக்கிறார் இயக்குநர் அட்லீ. இது பற்றி அட்லீ வட்டாரத்தில் விசாரித்தோம்.
பாலிவுட்டில் விஜய் இதுவரை நேரடியாக நடிக்கவில்லையே தவிர அவரது பல படங்கள் இந்தியில் டப் ஆகியிருக்கின்றன. ‘வேட்டைக்காரன்’, ‘வேலாயுதம்’, ‘காவலன்’, ‘குருவி’, ‘அழகிய தமிழ்மகன்’, ‘தலைவா’, ‘சச்சின்’, ‘துப்பாக்கி’, ‘புலி’, ‘ஜில்லா’, ‘தெறி’ உட்படப் பல படங்கள் அங்கே டப் ஆனதுடன் பல படங்கள் வரவேற்பையும் அள்ளியிருக்கின்றன. விஜய்யைத் தேடி பலமுறை பாலிவுட் பட வாய்ப்புகளும் வந்திருக்கின்றன. ஆனால், மொழி மற்றும் கம்ஃபோர்ட் ஸோன் காரணமாக அவர் தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார், இப்போதுதான் ‘வாரிசு’ படம் மூலம் தமிழ் – தெலுங்கு நேரடி பட முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்நிலையில் தற்போது விஜய்யை இந்திக்கு அழைத்துச் செல்லவுள்ளார் அட்லீ.
இப்போது அவர் ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் ‘ஜவான்’ படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள ஸ்டூடியோ ஒன்றில் நடந்து வருகிறது. ஷாருக்கான், நயன்தாரா, பிரியாமணி எனப் பலரும் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் விஜய்யையும் நடிக்க வைக்க, அட்லீ முயற்சி எடுத்து வந்தார். ‘வாரிசு’ படப்பிடிப்பிலிருந்து வந்த விஜய், அது குறித்து யோசித்துச் சொல்வதாகச் சொல்லியிருந்தார்.
சமீபத்தில் அட்லீயின் பிறந்தநாளை ‘ஜவான்’ படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கான் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார்கள். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்டூடியோவிற்குள் விஜய்யின் கார் வந்து சேர, மகிழ்ச்சியில் திக்குமுக்காடியிருக்கிறார் அட்லீ. ‘அண்ணா அண்ணா’ என நெகிழ்ந்ததுடன், ஷாருக்கானிடமும் விஜய்யை அறிமுகம் செய்து வைத்து மகிழ்ந்திருக்கிறார்.
‘ஜவான்’ ஷாருக்கானின் தயாரிப்பு என்பதால், விஜய்யை நடிக்க வைக்கும் ஐடியாவில் ஷாருக்கும் ஆர்வமாக இருப்பதால், அவரே விஜய்யை இன்வைட் செய்ய, விஜய்யும் சம்மதித்ததாகச் சொல்லப்படுகிறது. ஐந்து மொழிகளில் தயாராகும் ‘ஜவான்’ படத்தில் ஆந்திரா, தமிழ், மலையாள நடிகர்களும் நடித்து வருகிறார்கள். விஜய் ஒரு வாரம் கால்ஷீட் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். விஜய்யின் வசதியைக் கருத்தில் கொண்டுதான் சென்னையில் ஷூட்டிங் நடத்தி வருகிறார் அட்லீ என்றும் ஒரு செய்தி உலா வருகிறது.
இந்தப் படத்தின் மூலம் நயன்தாரா இந்தியில் அறிமுகமாகிறார் என்றாலும், நயனை இந்திக்குக் கொண்டு சென்ற பெருமை மோகன் ராஜாவுக்கு உண்டு. இப்போது அவர் சிரஞ்சீவியை வைத்து இயக்கி வரும் ‘காட்ஃபாதர்’ படத்தில் சல்மான்கான் மெயின் ரோலில் நடித்துள்ளார். இந்தி – தெலுங்கில் வருகிற அக்டோபர் 5ல் அந்தப் படம் வெளியாவதால், நயன்தாரா மகிழ்ச்சியில் உள்ளார்.
இன்னொரு பக்கம், விஜய் கொடுத்த ஒரு வார கால்ஷீட்டை வீணடிக்காமல் முன்கூட்டியே அவரது காட்சிகளை எடுத்து முடிக்கவும் அட்லீ திட்டமிட்டு வருவதாகச் சொல்கிறார்கள்.