புதுடெல்லி: போதைப் பொருள் கடத்தலை கண்டறிய உருவாக்கப்பட்ட ஆபரேஷன் கருடா பிரிவானது, இனிமேல் இன்டர்போலுடன் இணைந்து குற்றவாளிகளை கண்டறியும் என்று ெடல்லி காவல்துறைக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் இருந்து பல மாநிலங்களுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதால், அதனை கண்டறிந்து தடுப்பதற்காக ‘ஆபரேஷன் கருடா’ என்ற அதிரடி பிரிவின் நோடல் அதிகாரியாக டெல்லி சிறப்புக் காவல் ஆணையர் (குற்றப் பிரிவு) ரவீந்திர யாதவ் நியமிக்கப்பட்டார். இந்த ஆபரேஷன் கருடாவானது, சிபிஐயுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
மேலும் அனைத்து மாவட்ட போலீஸ், ஐஜிஐ போலீஸ், ரயில்வே போலீஸ், சிறப்பு பிரிவு மற்றும் குற்றப்பிரிவு ஆகியன ரகசிய தகவல்களை ஆபரேஷன் கருடாவிற்கு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து டெல்லி காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தலைநகரில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க சிபிஐயுடன் இணைந்து டெல்லி காவல்துறை செயல்பட்டு வந்தது.
இனிமேல் உலக நாடுகளுடன் இணைந்து ஆபரேஷன் கருடாவை செயல்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இன்டர்போலின் முயற்சியால், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அனைத்து நாடுகளும் பரஸ்பரம் தகவல்களை பரிமாறிக்கொண்டன. பல நாடுகளில் இருந்தும் இந்தியாவுக்கு சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், துபாய், மியான்மர், வங்கதேசம் போன்ற 8 நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. ‘ஆபரேஷன் கருடா’ மூலம் கிடைத்த சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் கடத்தல் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.