காதலில் விழுந்தேன்: "நான் தொடங்கி வைத்ததை சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயன்ட் செய்கிறார்கள்!"- பி.வி பிரசாத்

`காதலில் விழுந்தேன்’ படம் என்பதற்குப் பதில் `அட்ரா அட்ரா நாக்க மூக்க’ பாடலின் இயக்குநர் என்றால், மின்னல் வேகத்தில் நினைவுக்கு வந்துவிடுவார் பி.வி பிரசாத். அந்தளவிற்குப் படமும் பாடல்களும் செம்ம ஹிட். `காதலில் விழுந்தேன்’ வெளியாகி இன்றுடன் 14 வருடங்கள் ஆகின்றன. கிறங்கவைக்கும் அந்தப் பாடல்களின் நினைவுகளுடன் இயக்குநர் பி.வி.பிரசாத்தை தொடர்புகொண்டு பேசினோம்.

“என்னோட சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு. சாதாரண விவசாயக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து சினிமா இயக்கியது எல்லாம் பெரிய விஷயம். ‘காதலில் விழுந்தேன்’ சாத்தியமானது நண்பர்களின் உதவியால்தான். எல்லோரும் பணம் போட்டுத்தான் படம் தயாரித்தோம். இடையில் நிறைய சவால்கள் வந்தன. அத்தனை சவால்களையும் தூக்கி சாப்பிடும்படியாக ‘காதலில் விழுந்தேன்’ வெற்றி இருந்தது. அதுவும், முதல் படமே சூப்பர் ஹிட். பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது.

‘சகுந்தலாவின் காதலன்’ படத்தில் பசுபதி, பிரசாத்

இப்படி அனைத்து விதத்திலும் கொண்டாடப்பட்டாலும் மற்றொரு பெருமையும் படத்திற்கு உண்டு. அதாவது, படத்தை நானே இயக்கி தயாரித்தேன். அதனை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டது. இப்படி படத்தை முடித்து காப்பியாகக் கொடுத்தால் வாங்கி ரிலீஸ் செய்யும் வழக்கம், ‘காதலில் விழுந்தேன்’ படத்தில்தான் தொடங்கியது. நான் தொடங்கி வைத்ததைத்தான், இப்போது சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயன்ட், ஏஜிஎஸ் என சினிமா துறையில் எல்லா நிறுவனங்களும் பின்பற்றுகின்றன”.

‘காதலில் விழுந்தேன்’ டீம் இன்னும் உங்களுடன் தொடர்பில் இருக்கிறார்களா?

“எல்லோரும் நல்ல நட்புடன்தான் இருக்கிறோம். ஆனால், எனக்கு பெரிய ஏமாற்றம் ஒன்று உண்டு. வருத்தம் என்றுகூட சொல்லலாம். ‘காதலில் விழுந்தேன்’ படத்திற்குப் பின்னர் நகுலும் சுனைனாவும் பெரிய அளவில் வரவில்லை. ‘காதலில் விழுந்தேன்’ கதைக்கு அவர்கள் அம்சமாக இருந்தார்கள். அதற்குப்பிறகு, வராமல் போய்விட்டார்கள். ஒவ்வொரு நடிகர், நடிகைக்கும் தனித்துவம் மிகுந்த கதைகள் முக்கியமானது. சிறப்பான கதையை செலக்ட் செய்யவேண்டும். தனித்தன்மையுடன் இருந்தால் யாராலும் ஒன்றும் பண்ண முடியாது. அடித்துக்கொண்டு மேலே வந்துவிடலாம். இவர்களும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்திருந்தால் முன்னணிக்கு வந்திருக்கலாம். கதைகளில் கோட்டைவிடுவதாலேயே, பலர் சும்மா இருக்கிறார்கள். படங்கள் ஓடுவதில்லை. இப்போது இந்தி சினிமாவிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கதை ரொம்ப முக்கியம்”.

‘சகுந்தலாவின் காதலன்’ படத்தில் பி.வி பிரசாத், முக்தா பானு

இப்போது என்ன செய்கிறீர்கள்?

“‘காதலில் விழுந்தேன்’ படத்திற்குப்பிறகு நான் இயக்கிய ‘எப்படி மனசுக்குள் வந்தாய்’ எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. மூன்றாவது படம் ‘சகுந்தலாவின் காதலன்’ நீண்ட நாள்களாக வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. அதற்குக் காரணம், கொரோனாவும்தான். தற்போது, அனைத்துப் பணிகளும் முடிந்து தீபாவளி கழித்து படம் வெளியாகவிருக்கிறது. இதில், ஹீரோ, இயக்குநர், பாடலாசிரியர், இசை என அனைத்தையும் நானே செய்திருக்கிறேன். பசுபதி, கருணாஸ், சுமன், நண்டு ஜெகன், மொட்டை ராஜேந்திரன், பானு எனப் பெரிய நடிகர் கூட்டமே இருக்கிறது. வெறும் இயக்கம் மட்டும் செய்திருந்தால், இதுவரை பத்து படங்களுக்குமேல் இயக்கியிருப்பேன். ஹீரோவாகவும் திறமையை வெளிப்படுத்தவேண்டும் என்பதால்தான் தாமதமாகிறது. 2025-ம் ஆண்டுக்குள் நல்ல கதைகளுக்குள் நடித்து பேசும்படியாக வளர்ந்து நிற்பேன். இவ்ளோ வலி, வேதனைகளையும் தாங்கிட்டு இன்னும் ஏன் சினிமாவுல இருக்கேன்னா, கண்டிப்பா வெற்றி கிடைக்கும். அந்த வெற்றியில் கிடைக்கும் சந்தோஷம் எல்லா வேதனைகளையும் மறக்கடித்துவிடும் என்பதால்தான்”.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.