‘வெற்றிக்கு குறுக்குவழி இல்லை’, ‘கடின உழைப்பால் மட்டுமே வெற்றி அடைய முடியும்’,’கடின உழைப்பு ஒருபோதும் வீண் போகாது’ போன்ற வாசகங்களை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடந்து வந்திருக்கலாம். ஆனால், இந்த 23 வயது இந்திய இளைஞரின் வாழ்வு, முன்கூறிய அத்தனை கருத்துகளையும் உண்மை என்பதை நிரூபிக்கிறது.
இந்தியாவை சேர்ந்த வத்சல் நஹாடா என்ற இளைஞர், அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழக்கத்தில், பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். தற்போது, அவருக்கு உலக வங்கியில் வேலை கிடைத்த அனுபவத்தை, தனது Linkedin பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் அந்த அனுபவம் பல்வேறு தரப்பினரை கவர்ந்துள்ளது. 600 மின்னஞ்சல்கள், 80-க்கும் மேற்பட்ட போன் கால்கள் என தனது தொடர் முயற்சியினால் கிடைத்த இந்த வேலை குறித்து அவர் பகிர்ந்த பதிவை, Linked-in தளத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் போட்டுள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் அதை பகிர்ந்துள்ளனர்.
இவரின் இந்த போராட்ட கதை, 2020ஆம் ஆண்டு கரோனா காலகட்டத்தில் இருந்துதான் தொடங்கியது என அவர் கூறுகிறார். தொடர்ந்து அவரது பதிவில்,”எனக்கு கையில் வேலை இல்லை, இன்னும் 2 மாதங்களில் நான் பட்டதாரியாக போகிறேன். நான் ‘யேல்’ பல்கலைக்கழகத்தின் மாணவன். எனக்கு ஒரு பாதுகாப்பான வேலைக்கூட கிடைக்காதபோது, யேலுக்கு வந்து படித்து என்ன பயன் என்று எனக்குள்ளே தோன்றியது.
இந்தியாவில் உள்ள என் பெற்றோர்கள் அழைத்து, நான் எப்படி இருக்கிறேன் என கேட்டபோது, நன்றாக இருக்கிறேன் என பொய் செல்லவே மிகவும் கடினமாக இருந்தது. இந்தியாவுக்கு வேலையில்லாமல் போகக் கூடாது என நினைத்தேன். மேலும், எனது முதல் சம்பளத்தை டாலரில் தான் பெறுவேன் என வைராக்கியத்துடன் இருந்தேன். என்னுடைய தொடர்பில் இருக்கும் அனைவரையும் தொடர்புகொண்டு வேலைக்காக பேசினேன். ஆனால், வேறு வேலைவாய்ப்பு தளங்களையோ, பிற வகையிலான விண்ணப்பங்களையோ நான் முற்றிலுமாக தவிர்த்தேன். அது கொஞ்சம் அபாயகரமானதுதான், இருப்பினும் அதை நான் செய்தேன்.
படிப்பு நிறைவு பெற இருந்த 2 மாதங்களில் மட்டும் 1,500 விண்ணப்பங்களை அனுப்பியிருப்பேன். 600-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், 80-க்கும் மேற்பட்ட அழைப்புகளை வேலைக்காக செய்தேன். ஆனால், தொடர்ந்து நிராகரிக்கப்பட்டேன். பல கதவுகளை தட்டியதன், காரணமாக சில பாதைகள் திறந்தன. 2020ஆம் ஆண்டு மே மாதத்தில் எனது கையில் 4 வேலைகள் இருந்தன. அதில் தேர்ந்தெடுத்ததுதான் இந்த உலக வங்கி வேலை. உலக வங்கியின் தற்போதைய ஆராய்ச்சி இயக்குநருடன் உடன் இணை ஆசிரியராக ஒரு வேலை கிடைத்தது. அதை நான் முன்னதாக கேள்விப்பட்டதுக் கூட இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர் தனது பொருளாதாரத்தில் தனது இளநிலை பட்டத்தை டெல்லி ஸ்ரீராம் காமர்ஸ் கல்லூரியில் பெற்றுள்ளார். தனது வாழ்வின் இந்த கடினமான காலகட்டம் தனக்கு சில விஷயங்களை கற்றுக்கொடுத்ததாகக் கூறினார். எந்தச் சூழலிலும் என்னால் உயிர்வாழ முடியும் என்ற நம்பிக்கையை, அது கற்றுக்கொடுத்தது.
தற்போது தனது அனுபவத்தை மற்றவர்களுக்கு பகிர்ந்த நோக்கம் குறித்தும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
“மக்கள் ஒருபோதும் முயற்சியைக் கைவிடக்கூடாது என்பதை வலியுறுத்ததான் இந்த பதிவு. உலகமே இடிந்து விழுவது போன்று, உங்களுக்கு நெருக்கடி வருகிறது என்றால்,தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். உங்களை ஒளித்துக்கொள்ளாதீர்கள். உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, போதுமான கதவுகளைத் தட்டினால் நல்ல நாட்கள் உங்களை நோக்கி வரும்” என்று பதிவின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.