வங்கிகள் இனி தேவையில்லையா? 'பிட்காயின்' எனும் புரட்சி!

2007 – 2008. உலகளாவிய பொருளாதார வீழ்ச்சிக் காலம்… வேலைகளை இழந்து கோடிக்கணக்கான மக்கள் வாடினர். பொருளாதார நடவடிக்கைகளில் நாட்டு அரசாங்கங்கள் எடுக்கும் முடிவுகள் குறித்து சர்வதேச அளவில் பலரும் பல்வேறு கேள்விகளை முன்வைக்கத் தொடங்கினர்…

அக்டோபர் 31, 2008. சட்டோஷி நாகமோட்டோ என்ற மர்ம நபர் மிகவும் வித்தியாசமான, புதுமையானதொரு எலெக்ட்ரானிக் பணப் பரிவர்த்தனை முறை குறித்து இன்டர்நெட்டில் ஓர் அறிக்கை (White paper) விடுகிறார். அதில் குறிப்பிட்டிருந்த டிஜிட்டல் பணத்தின் பெயர்தான் ‘பிட்காயின்’ (Bitcoin)!

பணம் ஓரிடத்தில்…. மதிப்பு வேறிடத்தில்!

உங்களின் நண்பருக்கு நீங்கள் 4 கிராம் தங்கம் தர வேண்டும் என்றால், உங்களிடம் உள்ள ஒரு சவரன் (8 கிராம்) தங்க நாணயத்தில் பாதியை வெட்டி தந்து விடலாம். தங்கமும், அதன் மதிப்பும் வெவ்வேறல்ல!
இதுவே, உங்கள் நண்பருக்கு, நீங்கள் 1000 ரூபாய் தர வேண்டும், 2000 ரூபாய் நோட்டை பாதியாக கிழித்து தர மாட்டீர்கள் அல்லவா? ஆம். ரூபாய் நோட்டு எனும் பேப்பரில் மதிப்பு கிடையாது. அது வெறும் காகிதம்.

Money (Representational Image)

இன்று பணத்துக்கு மதிப்பை அரசாங்கங்களும், வங்கிகளுமே அளிக்கின்றன. இதனால் பணமும் அதன் மதிப்பும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. ஒரு நாட்டின் அரசோ அல்லது மத்திய வங்கியோ ஒரு கரன்சியை ஒரே இரவில் செல்லாது என்று அறிவித்தால், பணம் என்பது வெறும் காகிதம் ஆகிவிடுகிறது.

நீங்கள் உழைத்து சம்பாதித்து பர்ஸில் வைத்துள்ள பணத்துக்கு திடீரென்று மதிப்பு இல்லை என்றால் எப்படி உணர்வீர்கள்? அப்போது உங்களின் உழைப்புக்கான மதிப்பை எங்கே எப்படித்தான் சேமித்து வைக்க முடியும்? முகம் தெரியாத மூன்றாம் நபரோ, வங்கியோ, அரசாங்கமோ உங்களின் உழைப்புக்கும் நீங்கள் பெற்ற வெகுமதிக்கும் எப்படி உரிமை கொண்டாட முடியும்?
ஒரு காமன் மேனின் இந்தக் கேள்விகள்தான் பிட்காயினின் அடிப்படையாக அமைகின்றன…

பிட்காயின் தீர்க்கும் பிரச்னைகள்…

பிட்காயின் முக்கியமாக பேசுவது ‘டபுள் ஸ்பெண்டிங் (Double Spending)’ பற்றி… டிஜிட்டலில் பணப் பரிமாற்றம் நடக்கும்போது, அக்கவுண்டில் இல்லாத காசை இருப்பதுபோல் காட்டுவதும், ஒரே பணப் பரிமாற்ற தகவலை பலருக்கு அனுப்புவதையும் ‘டபுள் ஸ்பெண்டிங்’ என்கிறோம்.

‘ஒரு பழம் இந்தா இருக்கு, இன்னொன்னு எங்க?’ என்று கேட்டால் ‘அதான்ணே இது’ என்று சொல்வது போலத்தான் இதுவும். சிம்பிளாக சொன்னால் ஏமாற்றுவது.

அதான்ணே இது!

பிட்காயினுக்கான தேவை இதுதான்!

டபுள் ஸ்பெண்டிங் மோசடி நடக்காமல் இருக்கவும், பணம் பரிவர்த்தனை ஆகும்போது தேவையில்லாத இடைத்தரகர்களின் தலையீட்டைத் தவிர்க்கவும், வங்கிகள் மற்றும் அரசாங்கங்கள் நம் பணத்தைக் கட்டுப்படுத்தாமல் இருக்கவும் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் பணம்தான் இந்த பிட்காயின். (இந்தப் பத்தியை இன்னும் ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள். முக்கியம்.)

ஒட்டுமொத்தமாக 21 மில்லியன் (2 கோடியே பத்து லட்சம்) பிட்காயின்கள் மட்டுமே இருக்கும்படி சட்டோஷி நாகமோட்டோ வடிவமைத்துள்ளார். தங்கம் என்பது குறிப்பிட்ட அளவு இருப்பதனால்தான் இன்றும் அது மக்களால் மதிக்கப்படுகிறது. இதை மனதில்கொண்டு பிட்காயினும் குறிப்பிட்ட அளவே இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிட்காயின் எப்படி பரிமாறப்படுகிறது?

உங்கள் கணினியில் பிட்காயின் செயலி ஒன்று இருக்கிறது. இப்போது அதன்மூலம் பணப் பரிவர்த்தனை செய்யப்போகிறீர்கள்… இனி என்ன நடக்கும் என்று கற்பனை செய்வோம்…

கனிக்கு டிஜிட்டல் பணத்தை அனுப்பும் ராஜு, அதே பணத்தின் நகலை பிரியாவுக்கும் அனுப்பினால் அதுதான் Double Spending. இதுவொரு மோசடியாகும்.

பிட்காயின் நெட்வொர்க்கில் தங்களை இணைத்துக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் பப்ளிக் கீ (இ மெயில் ஐடி போன்றது) மற்றும் பிரைவேட் கீ (பாஸ்வேர்டு போன்றது) – இவ்வாறு இரண்டு வெவ்வேறு எண்கள் வழங்கப்படும். இதில் பிரைவேட் கீயை யாரிடமும் சொல்லாமல் பாதுகாப்பது முக்கியம்!

நீங்கள் யாருக்கு பிட்காயின் அனுப்ப நினைக்கிறீர்களோ அவரின் பப்ளிக் கீயை குறிப்பிட்டு, அந்த நபருக்கு பிட்காயினை அனுப்பிவிடலாம். தனக்கு வந்த பிட்காயினைப் பெற உங்கள் நண்பர் அவரின் பிரைவேட் கீயை உள்ளிட்டு அதனைப் பெற்றுக்கொள்ளலாம்… ரொம்ப சிம்பிள் இல்லையா? ஆனால் இதன் பின் உள்ள அறிவியல் அபாரமானது!

தகவல் பெட்டி எனும் ‘பிளாக்ஸ்’

நீங்கள் உங்கள் நண்பருக்கு ஆயிரம் பிட்காயின் அனுப்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அனுப்பிய விவரம் இப்போது ஒரு தகவலாக மாற்றப்பட்டு கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் சேமிக்கப்படும். அடுத்து ஆன்லைனில் பிட்காயின் கொடுத்து ஒரு பொருள் வாங்குகிறீர்கள், அதுகுறித்த தகவல்கள் மற்றொரு தகவலாக சேமிக்கப்படும்.

இதுபோல ஏறக்குறைய 1 மெகாபைட் அளவிலான பிட்காயின் பரிவர்த்தனை குறித்த தகவல்கள் சேர்ந்தவுடன் (கணக்குக்காக, தோராயம் 1500 பரிவர்த்தனைகள் என்று வைத்துக்கொள்ளலாம்…), அதையெல்லாம் பொட்டலம் கட்டி, ஒரு பிளாக் (அல்லது டிஜிட்டல் தகவல் பெட்டகம்) உருவாக்கப்படுகிறது. பரிவர்த்தனை தகவல்கள் சேர சேர, பல புதிய பிளாக்குகள் உருவாக்கப்படுகின்றன. ஒருமுறை ஒரு பிளாக் உருவாக்கப்பட்டுவிட்டால், சட்டோஷி நாகமோட்டோவே நினைத்தாலும் அதனை மாற்ற முடியாது!

பப்ளிக் கீ மற்றும் பிரைவேட் கீ

இதுமட்டுமின்றி, யாரிடமிருந்து யாருக்கு, எவ்வளவு பிட்காயின்கள், எந்த நேரத்தில் அனுப்பப்படுகிறது என்ற தகவல்களுடன், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் புதுமையான ஆல்ஃபா-நியூமெரிக் எண் ஒன்றும் உருவாக்கப்படுகிறது. இந்தப் புதுமையான எண்ணுக்குப் பெயர்தான் ‘ஹேஷ்’.

பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் சுவாரஸ்யம் என்னவென்றால், தகவல்கள் அடங்கிய பிளாக்ஸ் எல்லாமே ஒன்றுடன் ஒன்று சங்கிலி இணைத்தது போல தொடர்புடையதாக இருக்கும். முதல் பிளாக்கின் விவரங்கள் இரண்டாம் பிளாக்கில் கலந்தும், இரண்டாம் பிளாக்கின் விவரங்கள் மூன்றாம் பிளாக்கில் கலந்தும், மூன்றாவதின் விவரங்கள் நான்காவதிலும் என்று இந்தச் சங்கிலித் தொடர் நீண்டுகொண்டே போகும்.

சரி, இப்படி பரிவர்த்தனை விவரங்களை பிளாக்-செயின்களாக மாற்றி வைப்பதற்கான அவசியம் என்ன?

ஜூன் மாத கடைசி சனிக்கிழமை அன்று நீங்கள் வாங்கிய ஒரு பொருளின் விவரத்தை ஹேக்கிங் செய்ய ஒருவர் முயற்சிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். உதாரணமாக அந்தத் தகவல் 1548-வது பிளாக்கில் இருக்கிறது என்றால், முதலில் அவருக்கு 1547 வது பிளாக்கின் விவரங்கள் வேண்டும். அதைக் கண்டுபிடிக்க அதற்கு முந்தைய பிளாக்கின் விவரங்கள் என்று அனைத்து பிளாக்குகளின் விவரங்களும் தேவைப்படும். இதனால்தான் பிட்காயினை ஹேக் செய்வது மிக மிகக் கடினம் என்று கூறுகிறார்கள்…

பிட்காயின் ‘பிளாக்ஸ்’ இப்படித்தான் இருக்கும்…

பிட்காயின் பரிவர்த்தனையை கண்காணிப்பது யார்?

டிஜிட்டல் பரிவர்த்தனை நடக்கும்போது, கணக்கில் இருந்து சரியான நபருக்கு சரியான அளவு பணம் செல்கிறதா என்பதனை வங்கியின் கணினிகள் அல்லது ஊழியர்கள் சரிபார்ப்பார்கள். பிட்காயினில் பரிவர்த்தனை சரிபார்ப்பு மிகவும் வித்தியாசமாகவும் சாமர்த்தியமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிட்காயின் போன்ற பல கிரிப்டோகரன்சிகளை பொறுத்தவரை, பயனாளர்களே பரிவர்த்தனைகளை அங்கீகரிக்கும் வங்கி ஊழியர்கள் போல செயல்படுகின்றனர். இந்த பரிவர்த்தனை சரிபார்ப்புக்கு பெயர்தான் ‘மைனிங்’ அல்லது Proof of Work.

Bitcoin & Blockchain

ஒரு பரிவர்த்தனை நடந்தவுடனே அதுகுறித்த தகவல்கள் பிட்காயின் பயன்பாட்டாளர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்துவிடும். பரிவர்த்தனையில் எல்லாம் சரியாக இருக்கிறது என்று இப்போது யார் வேண்டுமானாலும் அதை உறுதி செய்யலாம். ஆனால், பிழைகளோடு உள்ள பரிவர்த்தனையை தெரிந்தோ தெரியாமலோ யாராவது சரி என்று அங்கீகரித்தால் என்னாவது? அதற்குத்தான் ஹேஷ் உதவுகிறது.

‘ஹேஷ்’ என்பது ஒரு ரகசிய எண்ணெழுத்து புதிர் போன்றது. இந்தப் புதிருக்கான விடையை முதலில் யார் கண்டுபிடிக்கிறார்களோ, அவர்களே பரிவர்த்தனையை சரிபார்த்தவர்களாக பிட்காயின் அமைப்பு எடுத்துக்கொள்ளும். இவ்வாறு பரிவர்த்தனைகளை சரி பார்க்கும் நபர்களுக்கு பெயர்தான் ‘Miners’ (மைனர்ஸ்.)

மைனர்கள் ஒரு பரிவர்த்தனையை அங்கீகரித்த பின்னர், அந்தத் தகவல் பிளாக்செயினுக்குள் நிரந்தரமாக பதியப்படுகிறது. இனி அதனை யாராலும் மாற்ற முடியாது!

மைனர்களுக்கு கூலியாக தற்போது 6.25 பிட்காயின் வழங்கப்படுகிறது! ஒவ்வொருமுறை 210,000 பிளாக்குகள் நிரப்பப்பட்டதும், இந்தக் கூலியானது பாதியாக குறைக்கப்படும். இந்த நிகழ்வை ‘Halving’ என்கிறார்கள். சராசரியாக நான்கு வருடங்களுக்கு ஒருமுறை Halving நிகழ்வு நடக்கிறது. கடைசியாக மே 2020-ல் இது நிகழ்ந்தது. 21 மில்லியன் பிட்காயின்களும் மக்கள் கைகளுக்குச் சென்ற பின்னர், மைனர்களுக்கு பரிவர்த்தனையில் ஒரு சிறிய பங்கை சேவைக்கட்டணமாக வழங்க வேண்டியிருக்கும்.

‘பரிவர்த்தனையை சரி பார்த்து நானும் ஈசியாக பிட்காயின் சம்பாதிக்கலாமே’ என்றால் அது அவ்வளவு சுலபமல்ல. பிட்காயின் ஹேஷுக்கான விடையைக் கண்டுபிடிப்பதற்கு உங்களுக்கு நிறைய கம்ப்யூட்டிங் பவர் தேவைப்படும். இதற்கு ‘நிறைய மின்சாரமும்’ தேவை.

பிட்காயின் மைனிங் செய்வதற்கு நிறைய மெனெக்கெட வேண்டும் என்பதால், அதற்கு தகுதியானவர்கள் மட்டுமே அதனைச் செய்கின்றனர்!

பகிரப்பட்ட தகவல்கள் எனும் Distributed Ledger

இன்று அனைத்து போன் நம்பர்களையும் போனில் மட்டுமே ஸ்டோர் செய்து வைக்கிறோம். அதில் சிலவற்றைக்கூட நாம் ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை. என்றாவது போன் வேலை செய்யாமல் போனால் என்னாவது? அதற்குத்தான் நம்பர்களை ஒரு நோட்டில் எழுதி வைக்க வேண்டும் அல்லது கூகுள் ஷீட்ஸ் போன்றவற்றிலும் பதிவேற்றலாம். உங்களுக்கு வேண்டிய தகவல் ஓரிடத்தில் மட்டும் இல்லாமல் பல இடங்களில் இருந்தால் பாதுகாப்புதான் இல்லையா? இதைத்தான் பிட்காயின் செய்கிறது.

கூகுளில் தேடினால், நீங்களும் பிட்காயின் பரிவர்த்தனைகளை லைவ்வாக பார்க்கலாம்!

உதாரணம்…

ஒரு குழுவில் உங்களுடன், உங்கள் நண்பர்களைச் சேர்த்து 4 பேர். உங்களுக்கு இடையே பணத்தை பரிமாறிக்கொள்ளும்போது, அதுபற்றிய செய்தி நான்கு பேரின் மொபைலுக்கும் வந்துவிடும்படி ஒரு செட் அப் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் தன்னுடைய வரவு செலவு கணக்கை மாற்ற முயற்சித்தால், அதையும் மற்ற நால்வரும் அறிந்துகொள்ள முடியும். எனவே, கணக்கு வழக்கில் ஒருவரால் மாறுதலை செய்யவே முடியாது. வெளிப்படைத்தன்மை இருப்பதால் நாணயமான கணக்கு வழக்கு சாத்தியமாகிறது. இவ்வாறு அனைவரிடமும் பணப்பரிவர்த்தனை சம்பந்தப்பட்ட தகவல் பகிரப்படுவதுதான் டிஸ்ட்ரிப்யூட்டட் லெட்ஜர்-ன் சிறப்பு. பிளாக்செயினில் இதுதான் நடக்கிறது.

Distributed Ledger

ஆயிரம் பேர் கொண்டவொரு பிட்காயின் பிளாக்செயின் குழுவுக்கு இடையேயுள்ள அனைத்து பணப் பரிமாற்ற தகவல்களும் ஆயிரம் பேரின் போன்/கம்ப்யூட்டரிலும் பகிரப்படும். இதனால் பொய்க் கணக்கு எழுதுவதற்கு சாத்தியமே இல்லை!
மேலும் ஆயிரம் போன்/கம்ப்யூட்டர்களில் தகவல்கள் இருப்பதால், இந்த அனைத்து டிவைஸ்களையும் ஒருவர் ஹேக் செய்தால் மட்டுமே பிளாக்செயினுக்குள் உள்ள ஒரு கணக்கை மாற்ற முடியும். இது மிக மிகக் கடினம்!
ஓர் உதாரணத்துக்கு, நாட்டின் அரசாங்கங்கள் வரிப் பணத்தை பிளாக்செயின் மூலம் செலவு செய்தால், தங்களின் பணம் எவ்வாறு செலவு செய்யப்படுகிறது என்பது மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிய வரும். ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வழக்கு இருப்பதால் ஊழல் ஒழியும்! (முதல்வன் 2-விற்கான கதை ரெடி!)

பிட்காயின் தொழில்நுட்பத்தின் சாதக பாதகங்கள் – ஒரு ரீகேப்

* பிட்காயின் தொழில்நுட்பம் மூலம், வங்கி போன்ற மூன்றாம் நபரின் தலையீடு இல்லாமல் அவ்வப்போது பணப்பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும்!

* வெளிப்படைத்தன்மை இருப்பதால், கணக்கு வழக்கை யாராலும் மாற்ற முடியாது.

* ஒவ்வொரு பிளாக்கும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளதால், பிட்காயினை ஹேக்கிங் செய்வது மிக மிகக் கடினம்.

* ஒருமுறை ஒரு தகவல் பிளாக்செயினுக்குள் வந்துவிட்டால், அது காலமுள்ளவரை நிலைத்திருக்கும்!

* பிட்காயினை மைனிங் செய்வதற்கு நிறைய கணினி ஆற்றல் மற்றும் மின்சாரம் தேவைப்படுகிறது.

ஊழல்!

* என்னதான் பிட்காயின் பரிவர்த்தனையில் வெளிப்படைத் தன்மை இருந்தாலும், அதனை பரிமாற்றம் செய்யும் தனி நபரின் அடையாளம் வெளியிடப்படுவதில்லை. இதனால் டார்க் வெப் மற்றும் தீவிரவாத பரிவர்த்தனைகளுக்கு பிட்காயினை சமூக விரோதிகள் பயன்படுத்துகின்றனர். இது நிச்சயம் நல்ல விஷயமல்ல!

அதேநேரத்தில் கடுமையான சட்ட திட்டங்களும், சட்டத்துக்கு புறம்பான பரிவர்த்தனைகளைக் கண்காணித்து, தவறான செயல்களில் ஈடுபடும் வாலெட்களை முடக்கும் அல்காரிதமும் விரைவில் வரவுள்ளன. அப்போது பிட்காயினின் இந்த முக்கிய பின்னடைவு சரி செய்யப்படும் வாய்ப்புள்ளது.
எந்தவொரு தொழில்நுட்பத்துக்கும் சாதக பாதகங்கள் உண்டு. அதையறிந்து சாமர்த்தியமாய் பயன்படுத்துவதே நம் கடமையாகும்!

சரி, பிட்காயின் மட்டுமே வங்கிகளுக்கு மாற்றாக அமையுமா என்றால் அது கேள்வுக்குறியே! ஆனால் அதிவேக இன்டர்நெட்டும் பிளாக்செயின் தொழில்நுட்பமும் வங்கிகள் போன்ற இடைத்தரகர்களின் வேலையை இனி மெல்ல மெல்ல நீக்கும் என்பது உண்மையே!

குறிப்பு: பிட்காயின் பின்னணியில் உள்ள அறிவியலை விளக்குவது மட்டுமே இந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கமாகும். பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளை வாங்குவதும் விற்பதும் தனி நபர் விருப்பமாகும்!

நீங்கள் போவதற்கு முன்… பிட்காயினை வடிவமைத்த சட்டோஷி நாகமோட்டோ ஒருவராகவும் இருக்கலாம், பல்வேறு நபர்களாகவும் இருக்கலாம். இந்த மர்மம் இன்றும் விடிந்தபாடில்லை! அது கண்டிப்பாக நான் இல்லை; ஒருவேளை நீங்கள்?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.