`இந்த ஆட்சியில் பெண்கள் வீட்டிலிருந்து வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர்'- இபிஎஸ் அறிக்கை

தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரத்தைத் தடுத்து நிறுத்தி, மக்கள் அச்சமின்றி வாழத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தனது அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாய் திகழ்ந்தது; சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழகக் காவல்துறை சட்டப்படி, நியாயமாக, சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டனர்; மக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர். ஆனால், இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாக மாறி உள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் சர்வ சாதாரணமாக தினசரி நடைபெறுகின்றன.
image
குற்றவாளிகள் அச்சமின்றி சுதந்திரமாக ஆயுதங்களுடன் நடமாடி வரும் நிகழ்வுகள் அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகளாக வெளிவருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளினால், மக்கள் ஒருவித அச்சத்துடனேயே வாழ்கின்றனர். குறிப்பாக, பெண்கள் வீட்டிலிருந்து வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர். கடந்த வாரத்தில், கோவை, திருப்பூர், சேலம், மதுரை, தாம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகின்றன.
தமிழகத்தில் போதைப் பொருள் கலாசாரம் போன்று, வெடிகுண்டு கலாசாரமும் தலைதூக்கி உச்சத்தில் உள்ளது. எங்களது ஆட்சியில் சுதந்திரமாக, சட்டப்படி செயல்பட்ட காவல்துறை தற்போது செயலற்று உள்ளது. இதுபோன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாமல், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல், மாய உலகம் ஒன்றில் வாழும் ஒரு நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரை தமிழகம் பெற்றுள்ளது வேதனைக்குறியது.
image
எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைக்கிறதோ, அப்போதெல்லாம் வெடிகுண்டு கலாசாரம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. தனி மனிதரின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை ஆளும் திமுக-வினர் உருவாக்கி வருகின்றனர். இது, அமைதியான தமிழகத்திற்கு மிகவும் ஆபத்தான போக்காகும். இனியாவது இந்த விடியா திமுக அரசு, வெடிகுண்டு கலாசாரத்தைக் கட்டுப்படுத்தி, தமிழக மக்கள் அச்சமின்றி வாழத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.