புதுச்சேரி அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. முந்தைய ஆட்யின் போது, காங்கிரஸ் முதல்வராக நாராயணசாமிக்கும் ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் நாள்தோறும் பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் நகர்ந்தது புதுச்சேரி அரசியல். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜகவினரும் கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால், ஆளுநரின் அதிகாரம் பெரிதாக இல்லையென்றாலும், கூட்டணிக்குள்ளேயே குழப்பம் நீடித்து வருகிறது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராக உள்ளார். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதுமே, துணை முதல்வர், முக்கியத்துறைகளின் அமைச்சர் பதவிகளை கேட்டது பாஜக. நீண்ட இழுபறிக்கு பின்னர், சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர் பதவிகளை பாஜகவுக்கு ரங்கசாமி வழங்கினார். அப்போது முதலே இரு கட்சிகளுக்கும் இடையே மனக்கசப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இப்படியே போனால், மாநில அரசியலில் கோலோச்ச முடியாது என்று கருதிய பாஜக, மாநில அரசின் பரிந்துரையின்றி கடந்த ஆட்சியின்போது செய்ததை போன்றே ஆளுநர் மூலம் நியமன எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேரை நியமித்துக் கொண்டதுடன், மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.க்களையும் தங்கள் பக்கம் வளைத்துக் கொண்டது. தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமியிடம் முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சரவை இலாக்காக்களையும், வாரியத் தலைவர் பதவிகளையும் பாஜக கேட்டு வந்ததாகவும், அதற்கு முதல்வர் ரங்கசாமி ஒப்புக்கொள்ளவில்லை எனவும் அம்மாநில அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதனால், கடுப்பான பாஜகவினர் வெளிப்படையாகவே தங்களது எதிர்ப்பை காட்டத் தொடங்கி விட்டனர். மாநில அரசின் மீது முறைகேடு குற்றச்சாட்டுகளை சட்டமன்றத்திலேயே முன்வைத்தனர். கூட்டணியில் உள்ள பாஜக எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளை முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பதாகவும், பாஜகவிற்கு ஆதரவு தரும் சுயேச்சை எம்எல்ஏக்களை முதல்வர் ரங்கசாமி அலட்சியப்படுத்தி பழிவாங்குவதாக கூறி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பாஜக ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் சட்டமன்ற வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு பாஜக எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர்கள் முதலமைச்சர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆளும் கூட்டணி கட்சியை சேர்ந்த பாஜக மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களின் இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக, சட்டமன்ற வளாகத்திலேயே, பாஜக மற்றும் பாஜக ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது. அதில், இந்த விவகாரங்கள் குறித்து சூடு பறக்க விவாதங்கள் நடைபெற்றதாக தெரிகிறது. ஒருகட்டத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறி விடலாம் என பாஜக எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்ததாகவும், பாஜக மேலிடத்திடம் ரங்கசாமிக்கு இருக்கும் நல்ல உறவை சுட்டிக்காட்டி அவர்களை கட்சியின் சீனியர்கள் சமாதானப்படுத்தியதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் தொடர்ச்சியாக, ரங்கசாமி மீதான எதிர்ப்பை சட்டமன்றத்திலேயே அவர்கள் தெரிவித்ததுதான் அதிர்ச்சி ரகம் என்கிறார்கள். பாஜகவின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கூட்டணியில் இருந்துக்கொண்டே விமர்சனம் செய்யும் பாஜகவினரை கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், கூட்டணியில் இருந்து விலகி விடலாம் எனவும், நம்மால்தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள்; வெற்றி பெற்று விட்டு இப்போது விமர்சிப்பது சரியல்ல; வேண்டுமானால் மீண்டும் தேர்தலை சந்திக்கலாம் எனவும் அவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களை முதல்வர் ரங்கசாமி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது.
இதுகுறித்து புதுச்சேரி அரசியலை கவனித்து வரும் அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், “பாஜக இல்லையென்றால் திமுக எம்.எல்.ஏ.க்களையும், சுயேச்சைகளையும் வைத்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என என்.ஆர்.காங்கிரஸ் நினைக்கிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் என்.ஆர்,காங்கிரஸில் இருந்தே சில எம்.எல்.ஏ.க்களை தூக்கும் முடிவில் பாஜக இருக்கிறது.” என்கிறார்கள்.