ராஜஸ்தான் முதல்வர் பதவியை பிடிக்க சச்சின் பைலட் தீவிரம் – ஹெலாட் எதிர்ப்பு…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் பதவியை பிடிக்க காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போதைய முதல்வர் அசோக் ஹெலாட் அகில இந்திய காங்கிரஸ் தலைமை பதவிக்கு போட்டியிடுவதால், துணைமுதல்வர் சச்சின் பைலட் முதல்வர் பதவியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறார். ஆனால், அதற்கு ஹெலாட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், துணைமுதல்வராக உள்ள சச்சின்பைலட், முதல்வராக பதவி ஏற்பதை தடுக்கும் வகையில் அசோக் கெலாட் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால், ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும், அங்கு முதல்வர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது. அப்போது ராகுல் தலையிட்டு, மத்த தலைவர் அசோக் ஹெலாட்டுக்கு முதல்வர் பதவியும், துணைமுதல்வர்  பதவி சச்சின் பைலட்டுக்கும் வழங்கப்பட்டது. இருந்தாலும் இருவருக்கும்  இடையே மோதல் நீடித்து வந்தது. இதையடுத்து, கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதத்தில், மோதல் தீவிரமானதால்,  துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். மேலும், அவரது ஆதரவாளர்களான 2அமைச்சர்கள் பதவியும் பறிக்கப்பட்டது. மேலும் சச்சின் பைலட்டின் மாநிலக் கட்சித் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டதுடன், சச்சின் பாஜகவுக்கு தாவ இருப்பதாக கூறப்பட்டது.  பின்னர் மூத்த தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அமைதி எற்பட்டது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய முதல்வர் அசோக் ஹெலாட் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதால், அவர் தலைமை பதவிக்கு தேர்வு செய்யப்பட்டால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும். அதனால், புதிய முதல்வராக தனது ஆதரவாளரை முதல்வராக்கும் வகையில் சச்சின் பைலட்டுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

அடுத்த முதல்வராக சச்சின் பைலட் வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அசோக் கெலாட் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தனது ஆதரவு எம்எல்ஏக்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், கெலாட் ஆதரவு 90-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள்  சபாநாயகரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. அசோக்கெலாட்டின் இந்த நடவடிக்கை சோனியா, ராகுல் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவதும் தள்ளிப்போயுள்ளது. சச்சின் பைலட்டுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள், போர்க்கொடி தூக்கியதால் முடிவு எடுப்பதில் இழுபறி நீடிக்கிறது.

இதையடுத்து சச்சின் ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் போஸ்டர், பேனர் வைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். ஜோத்பூரில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் எம்எல்ஏ சச்சின் பைலட் இடம் பெற்றுள்ள “சத்யமேவ் ஜெயதே, நயே யுக் கி தையாரி” என்ற வாசகங்கள் அடங்கிய வாசகங்கள்  எழுதப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தான் மாநில நிலைமையை உணர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், அசோக் கெலாட்டை அழைத்து ஆலோசனை நடத்தினார்.  ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கே இது பற்றி அசோக் கெலாட்டிடம் பேசி வருவதாகவும், ஆனால்,  அசோக் கெலாட், தன் கையில் எதுவும் இல்லை என்றும், எம்எல்ஏக்கள் தன்மீது உள்ள பாசத்தில் இப்படி செய்கிறார்கள் என்றும் கூறியதாக தெரிகிறது.  ராஜஸ்தானில் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில்,  ராஜஸ்தானில் நிலவும் அரசியல் குழப்பம் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும் என துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.  கட்சியின் விதிப்படி,  ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்கிற கட்சியின் முடிவின்படி, கெலாட்  முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் ராஜஸ்தான் மாநில முதல்வராவார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.