பசுமை விகடன் மற்றும் கிரீன்நீடா சுற்றுச்சூழல் அமைப்பு இணைந்து நடத்திய பனை திருவிழா, நேற்று 25.9.2022 ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள ராஜேஷ்வரி திருமண மஹாலில் கோலாகலமாக நடைபெற்றது.
பனைவோலகைகளில் செய்யப்பட்ட ஏராளமான கைவினைப்பொருள்கள், பனை உணவுப்பொருள்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பனை மரங்களின் சிறப்புகள் குறித்து, ஒரத்தநாடு கயல் கோபு நடத்திய நாட்டுப்புற இன்னிசை நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டுகளை பெற்றது.
இவ்விழாவிற்கு திருவாரூர் மாவட்ட கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.கே.ஜானகிராமன் தலைமை வகித்தார். கிரீன் நீடா தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவினை தொடங்கி வைத்து உரையாற்றிய தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் ஏ.நாராயணன் “பசுமை விகடனால், தமிழ்நாடு முழுவதும் விவசாயம் செழித்தோங்கி, பசுமையாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. தற்போது கிரீன்நீடா அமைப்பினரோடு இணைந்து நீடாமங்கலத்தில் முன்னெடுத்திருக்கும் இந்த பனை திருவிழாவின் விளைவாக, எதிர்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பனை மரங்கள் காட்சி அளிக்கட்டும்
பனை தொழிலாளர் நல வாரியத்தில் தற்போது பத்தாயிரம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள், இதை ஒரு லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்து. அதற்காக செயலாற்றி வருகிறோம். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களை ஒப்பீடும்போது, காவிரி டெல்டா மாவட்டங்களில் பனை வாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அதிக எண்ணிக்கையில் பனை மரங்கள் வைத்திருப்பவர்கள் பனை வாரியத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’என தெரிவித்தார்.
இவ்விழாவில்… சாகித்ய அகடாமி விருதுப்பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன், பனை செயற்பாட்டளர் காட்சன் சாமுவேல், கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் செ.நல்லசாமி, திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, வேளாண் செயற்பாட்டாளர் வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார், தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறை தலைவர் காமராசு, நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சோம.செந்தமிழ்செல்வன், திருவாரூர் வேலுடையார் கல்வி குழுமங்களின் தலைவர் தியாகபாரி, எக்ஸ்னோரா இண்டர் நேஷனல் தலைவர் செந்தூர்பாரி, ரிஷியூர் இயற்கை விவசாயி செந்தில், நெல் ஜெயராமன் பாரம்பர்ய நெல் பாதுகாப்பு மையத்தின் நிர்வாகி ராஜூ உள்ளிட்ட இன்னும் பலர் இவ்விழாவில் உரையாற்றினார்கள்.
பொதுமக்கள் பனைபொருள்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் எனவும் இதனை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினர். நீர்நிலைகளில் கரைகளில் நடுவதற்காக, 50,000 பனை விதைகள் சேகரிக்கப்பட்டு இவ்விழாவில் தயார் நிலையில் வைக்கட்டிருந்தன. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளில் கிரின் நீடா அமைப்பைச் சேர்ந்த ராஜவேலு, பசுமை எட்வீன், வில்லியம் ஸ்டீபன், முகம்மது ரபிஃக் உள்ளிட்ட இன்னும் பலர் முக்கிய பங்காற்றினர்.