கடந்த 2020-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய அரசின் நிதியில், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். தற்போது, அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்காக, ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களை தேர்வு செய்து அகழாய்வு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்படும் ஓவ்வொரு பொருட்களும் இந்த பகுதியில் அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தில் வைத்து காட்சிப்படுத்தப்பட உள்ளது.
இப்பகுதியில், இதுவரை 85-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க காதணி, தங்க நெற்றிப்பட்டயம், சங்க கால வாழ்விடப்பகுதிகள் என பல்வேறு வகையான பொருட்கள் கிடைத்து வருகின்றனர்.
மேலும் இந்த அகழாய்வு பணியில் வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடிக் கொண்ட கத்தி, இரும்பு வாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு ஆய்வாளர்கள் மத்தியில் தொடர் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, “மத்திய அரசு சார்பில் நடைபெறும் இந்த அகழாய்வு பணிகளானது இந்த மாத இறுதியுடன் நிறைவு பெற உள்ள நிலையில் இந்த அகழாய்வு பணியில் தொடர்ந்து அருங்காட்சியப் பணிகள் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.