புதுடில்லி :பணப்பரிமாற்ற மோசடி வழக்கில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு, புதுடில்லி நீதிமன்றம் இடைக்கால ‘ஜாமின்’ வழங்கி நேற்று உத்தரவிட்டது.தமிழகத்தைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், புதுடில்லி தொழிலதிபர்களின் குடும்பத்தினரை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார்.
மோசடி செய்த பணத்தில், பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா பதேகி ஆகியோருக்கு சொகுசு கார்கள் உட்பட பல விலை உயர்ந்த பொருட்களை இவர் வாங்கிக் கொடுத்ததாக, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக, அமலாக்கத்துறை மற்றும் புதுடில்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நடிகை ஜாக்குலினிடம் பலமுறை விசாரணை நடத்தினர். அமலாக்கத்துறையினர் சமீபத்தில் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில், ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளியாக சேர்த்தனர்.இந்நிலையில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
அவரை செப்., 26ல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு புதுடில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.அப்போது, வக்கீல் போல வெள்ளை சட்டை, கறுப்பு பேன்ட் அணிந்து ஜாக்குலின் நீதிமன்றத்துக்கு வந்தார். நீதிபதி முன் ஆஜரான அவர், இடைக்கால ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணை அடுத்த மாதம் 22க்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement