மதுரை: நெல்லை மாவட்டத்தில் வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லும்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு வழங்கப்படும் பணத்திற்கு, சேவை கட்டணம் செலுத்துமாறு நெல்லை ஜிஎஸ்டி உதவி கமிஷனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதை ரத்து செய்யக் கோரி நெல்லை எஸ்பி தரப்பில், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு வக்கீல் ஆஜராகி, ‘‘இதே பணியை மேற்கொள்ளும் சிஐஎஸ்எப் படையினருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மாநில போலீசாரிடம் மட்டும் வசூலிக்கின்றனர்’’ என வாதிட்டார். இதையடுத்து சேவை வரி செலுத்த வேண்டுமென்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதி முகம்மது ஷபீக், முந்தைய இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.