மதுரை | கீழடியைப்போல் கரடிப்பட்டி மலையடிவாரத்திலும் தொல்லியல் எச்சங்கள் கண்டுபிடிப்பு

மதுரை: கீழடியைப்போல் மதுரை மாவட்டத்தில் கரடிப்பட்டி மலையடிவாரத்திலும் தொல்லியல் எச்சங்கள் கிடைத்துள்ளன. இதில் பழங்கால இரும்பு உருக்கு ஆலை இருந்ததற்கான தடயம் கிடைத்துள்ளன.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் வடபழஞ்சி கிராமம் அருகிலுள்ள கரடிப்பட்டி மலையடிவாரத்தில் பழங்கால இரும்பு உருக்கு ஆலை இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வடபழஞ்சியை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்கள் மதன்குமார், சுதர்சன் ஆகியோர் அளித்த தகவலின்படி, மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் அதன் வரலாற்று ஆர்வலர் அருண் சந்திரன் களஆய்வு செய்தார். இதில் ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் இரும்பு உருக்கு ஆலை இருந்ததற்கான தடயங்களும் கிடைத்துள்ளன.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் அருண் சந்திரன் கூறியதாவது:

வடபழஞ்சி அருகிலுள்ள கரடிப்பட்டி மலையடிவாரப்பகுதியில் உள்ள தொல்பொருட்கள் நிறைந்துள்ள தொல்லியல் மேடு உள்ளது. கீழடி அகழாய்வில் சங்ககால மக்கள் பயன்படுத்திய கறுப்பு, சிவப்பு நிறத்திலான பானை ஓடுகள், தந்தத்தாலான வளையல்கள், அணிகலன்கள் போன்ற தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இத்தொல்லியல் மேடானது, கீழக்குயில்குடிக்கும் முத்துப்பட்டிக்கும் (பெருமாள் மலை) இடையில் இருப்பதால் சங்க காலம் முதல் கி.பி.10-ம் நூற்றாண்டு வரை சமணர் வழித்தடமாகவும் இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும், தொல்லியல் மேட்டில் பழங்காலத்தில் இரும்பு உருக்கு ஆலை ஒன்று இருந்ததற்கான தடயங்களும் கிடைத்துள்ளன. தமிழக தொல்லியல்துறையினர் வரும் ஆண்டுகளில் அகழாய்வு செய்ய முன்வரவேண்டும். அகழாய்வு செய்தால் கீழடியைப்போல் இங்கும் ஏராளமான தொல்பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. தமிழர்களின் சங்ககால நகர, நாகரிகத்தை அறிவியல் சான்றுகளுடன் நிரூபிக்கவும், ஏராளமான வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கவும் நல்வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே தமிழக தொல்லியல்துறையினர் கரடிப்பட்டி மலையடிவாரத்தில் தொல்லியல் மேடு பகுதியில் அகழாய்வு செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.