சென்னை அருகிலுள்ள மாங்காடு பரணிபுத்தூர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டுவருகிறது. ரவிக்குமார் என்பவருக்குச் சொந்தமான இந்த மறுவாழ்வு மையத்தில் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த மையத்தில், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மனநல பாதிப்பு காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இந்த மையத்துக்கு வந்த சில தினங்களிலேயே, அந்த மையத்திலிருந்து சிறுவன் தப்பித்து தனது வீட்டுக்குச் சென்றிருக்கிறார். மையத்தில், தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும், குண்டூசியால் குத்துவதாகவும், சிகரெட் சூடுவைத்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும், அங்கிருந்தவர்கள் தன்னை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தியதாகவும் அழுதிருக்கிறார். குழந்தையின் உடலில் காயத்தைப் பார்த்த பெற்றோர்கள், இந்தச் சம்பவம் தொடர்பாக, போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.
இந்தப் புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியது காவல்துறை. வழக்கு அடிப்படையில், மையத்தின் உரிமையாளர் ரவிக்குமார், மைய உதவியாளர் கார்த்திக், ஜெகன், மோகன் ஆகிய நான்கு பேரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சிறுவனுக்குப் பாலியல் கொடுமை நடந்தது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து, காவல்துறையினர் இவர்களைக் கைதுசெய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக இருக்கும் அந்த மறுவாழ்வு மையத்தின் பொறுப்பாளர் நாவலர் என்பவரைக் காவல்துறையினர் தேடிவருகிறார்கள். இந்நிலையில், மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையிலிருந்த பலரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த மறுவாழ்வு மையம் பூட்டப்பட்டிருக்கிறது. தற்போது அங்கு சிகிச்சையிலிருந்த நபர்கள் வேறு மறுவாழ்வு மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிகிச்சைக்குச் சென்ற சிறுவனுக்குப் பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.