
எனக்கு கிடைத்த விருதை எனக்கே அர்ப்பணிக்கிறேன் : ரேவதி
கடந்த 40 வருடங்களாக நடிகையாக, இயக்குனராக என திரையுலகில் தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார் நடிகை ரேவதி. தென்னிந்திய மொழிகளைத் தாண்டி ஹிந்தியிலும் கால்பதித்த ரேவதி, தேசிய விருது, தமிழக அரசு விருது என தனது நடிப்பிற்காக பல விருதுகளை பெற்றுள்ளார். இருந்தாலும் அவருக்கு கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது மட்டும் மிகப்பெரிய கனவாகவே இருந்தது. இந்த நிலையில் கடந்த வருடம் அவர் நடித்த பூதக்காலம் என்கிற படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருது அறிவிக்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் முதல்வர் பினராயி விஜயனிடமிருந்து இந்த விருதை பெற்றுக்கொண்டார் ரேவதி. இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “கிட்டத்தட்ட 40 வருடங்களாக இந்த விருது எனக்கு கிடைக்காமல் தள்ளிக்கொண்டே போனது. அதனால் தற்போது கிடைத்துள்ள இந்த விருதை நான் எனக்கே அர்ப்பணித்து கொள்கிறேன். அதற்கு நான் தகுதியானவள் தான் என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார் ரேவதி.
ஹாரர் திரில்லராக உருவாகியிருந்த பூதக்காலம் படத்தில் கணவன் இல்லாத நிலையில் தனது மகனை வளர்க்க தனியாளாக போராடும் சராசரிப்பெண் கதாபாத்திரத்தில் ரேவதி நடித்திருந்தார்..