டெல்டாவில் விடிய விடிய கனமழை 11,500 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது: மின்னல் தாக்கி தந்தை, மகன் பலி

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கனமழையால் அறுவடைக்கு தயாரான 11,500 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்கு இந்த ஆண்டு மே மாதத்திலேயே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி பணியை விவசாயிகள் மும்முரமாக செய்தனர். இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 72 ஆயிரத்து 816 ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில்  இன்னும் 2 வாரத்திற்குள் அறுவடை பணிகள்  முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் இடி, மின்னலுடன் கனமழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. தஞ்சாவூர், திருவையாறு, புதுகல்விராயன்பேட்டை, மானோஜிபட்டி, சித்திரைக்குடி, பூதலூர், கல்விராயன்பேட்டை, ஒரத்தநாடு சூரக்கோட்டை, ஆலக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. புதுகல்விராயன்பேட்டை பகுதியில் 2 நாட்களாக அறுவடை பணி நடந்து வந்ததால் அறுவடை இயந்திரம் வயலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பெய்த மழையால் அறுவடை எந்திரம் வெளியே வர முடியாமல் வயலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கனமழையால் அறுவடைக்கு தயாரான 4,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மூழ்கி சாய்ந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் குறுவை அறுவடை பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நாகப்பட்டினம் அருகே பாலையூர் பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள் வயலில் சாய்ந்தது. நேற்று காலை வரை மழை பெய்ததால் மழைநீர் வயலில் சூழ்ந்தது.  மாவட்டம் முழுவதும் 500 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு இல்லாததால் இழப்பை ஈடு செய்வது கடினம். பாதிப்படைந்த பயிர்களை கணக்கீட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 7 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.

மின்னல் தாக்கி தந்தை, மகன் பலி: மன்னார்குடி முக்குளம் சாத்தனூர் தளிக்கோட்டையை சேர்ந்த அன்பரசன் (55), மகன் அருள்முருகன் (25) ஆகியோர் வயலில் தேங்கியிருந்த மழை நீரை வெளியேற்ற சென்றனர். அப்போது இடைவிடாது மழை பெய்தபோதும் வயலில் தேங்கிய நீரை வெளியேற்றிக் கொண்டிருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் தந்தையும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருள்முருகனுக்கும், கார்த்திகா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி இருபது நாட்களே ஆன நிலையில், தந்தையோடு வயலுக்கு சென்ற போது மின்னல் தாக்கி பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.