சென்னை: ராம்கோ சூப்பர்கிரீட் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சிறப்பான பொறியாளர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் வழங்கப்படவுள்ள விருதுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் செப்.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானங்களிலும் கட்டமைப்புகளிலும் சிறந்து விளங்கும் பொறியாளர்களைத் தேர்வுசெய்து, அவர்களுக்கு ‘கட்டிடக் கலைநுட்ப விருதுகள்’ மற்றும் ‘கட்டமைப்பு கலைநுட்ப விருதுகளை’ வழங்கும் அறிவிப்பு வெளியான 2 வாரத்துக்குள் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர்.
கிராமப்புற வீட்டுக் கட்டுமானம், நகர்ப்புற குடியிருப்புக் கட்டுமானம், பொதுச் சேவை கட்டமைப்பு (பாலம்,சாலை, மெட்ரோ ரயில் நிலையம், மருத்துவமனை), பொதுப் பயன்பாடு கட்டமைப்பு (பூங்கா, விளையாட்டு அரங்கம்), தொழிற்சாலைக் கட்ட மைப்பு ஆகிய 5 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
மேலும், மாற்றுக் கட்டுமான பொருள்களைப் பயன்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானம்(சூரிய ஆற்றலை பயன்படுத்துதல்), புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், குறைவான கட்டுமான செலவு, மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த கட்டுமானம், பேரிடரைத் தாங்கும் திறன் ஆகியன விருதுக்கான சிறப்பு அம்சங்களாகக் கருதப்படும்.
இவ்விருது குறிப்பிட்ட திட்டத்துக்குத் தலைமை வகித்த தனிநபருக்கானது. விருதுக்குத் தன்னைத் தகுதியானவர் என்று கருதும் நபரோ அல்லது அவரை அறிந்தவர்களோ அல்லது அவர் சார்ந்திருக்கும் நிறுவனங்களோ கூட பரிந்துரை செய்யலாம்.
தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த அரசு, தனியார் நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றும் பொறியாளர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விருதுக்குத் தகுதியானவர்களைப் பரிந்துரை செய்யும்போது, எந்தப் பிரிவுக்கான பரிந்துரை என்பதோடு, அதற்கான சான்றாதாரங்களையும் உடன் இணைத்து https://www.htamil.org/01045 என்ற லிங்க்கில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் பலரின் வேண்டுகோளுக்கேற்ப செப்.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விருது நிகழ்வை ரினாகான் ஏ.ஏ.சி ப்ளாக்ஸ் இணைந்து வழங்குகிறது.