வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பதி : திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவம் தங்கு தடையில்லாமல் நடக்க தேவஸ்தானம் நேற்று அங்குரார்பணம் என்னும் முளைவிடுதல் உற்சவத்தை நடத்தியது.திருமலை ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று நிறைவு பெறும்படியாக வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.
இதன்படி இன்று முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் திருமலையில் தொடங்க உள்ளது. அக்.5ம் தேதி வரை நடக்கவுள்ள இந்த உற்சவம் தடையின்றி நடக்க வேண்டும் என்பதற்காக உற்சவத்தின் முன்தினம் மாலை அங்குரார்பணத்தை தேவஸ்தானம் நடத்தியது.இதையடுத்து நேற்று மாலை ஏழுமலையானின் சேனாதிபதியான விஷ்வக்சேனர் தலைமையில் அர்ச்சகர்கள் குழு அருகில் உள்ள நந்தவனத்திற்கு சென்று அங்கிருந்து புற்றுமண்ணை மண் பாத்திரத்தில் எடுத்து வந்தனர்.
இந்த புற்று மண்ணை கோவிலுக்குள் உள்ள மண்டபத்தில் பரப்பி அதில் பூதேவியின் உருவத்தை வரைந்தனர்.பூதேவியின் வயிற்று பகுதியிலிருந்து மண் எடுத்து அதை சிறிய மண்தொட்டிகளில் நிரப்பி அதில் நெல், கேழ்வரகு, பச்சை பயிறு, காராமணி, கோதுமை ,கொள்ளு, மொச்சை, கொண்டை கடலை, உளுந்து உள்ளிட்ட நவதானியங்களை ஊறவைத்து முளைவிடும் உற்சவத்தை நடத்தினர்.
பிரம்மோற்சவம் நிறைவு பெறும் வரை இதற்கு தினசரி நீர் தெளித்து பாதுகாப்பது வழக்கம். பின்னர் இந்த நவதானியம் நீர்நிலைகளில் கரைக்கப்படும். இந்த உற்சவத்தில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement