வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ஒரு மாநில அரசு, தன் எல்லைக்கு வெளியே உள்ள மற்றொரு மாநிலத்தில் பத்திரிகை விளம்பரம் செய்ய அனுமதிக்கலாமா என்பது குறித்து பதிலளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘காமன் காஸ்’ எனப்படும் அரசு சாரா அமைப்பின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், ஹீமா கோஹ்லி அடங்கிய அமர்வில் இது நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அந்த அமைப்பின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வாதிட்டதாவது:
ஒரு மாநில அரசு தன் எல்லைக்கு அப்பாற்பட்ட மற்றொரு மாநிலத்தில் உள்ள பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறது. குறிப்பாக தேர்தல் நடக்கும் நேரத்தில் இது செய்யப்படுகிறது. மக்கள் வரிப்பணத்தில் இருந்து மாநில அரசுகள் எப்படி இவ்வாறு விளம்பரம் செய்யலாம். தேவைப்பட்டால், கட்சியின் சார்பில் விளம்பரம் செய்யலாமே? இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதற்கு அமர்வு கூறியதாவது:தன் மாநிலத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தங்களுடைய அரசு செய்துள்ள திட்டங்கள், மாநிலத்தில் உள்ள வசதிகள் குறித்து ஒரு மாநில அரசு விளம்பரம் செய்திருக்கலாம். இதை எப்படி தடுக்க முடியும்? இவ்வாறு அமர்வு கூறியது.’புதுடில்லியில் கொரோனா நிவாரணம் வழங்கியது குறித்து நாடு முழுதும் எதற்கு விளம்பரம் செய்ய வேண்டும்’ என, பிரஷாந்த் பூஷண் வாதிட்டார்.இதையடுத்து, இது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement