புதுடெல்லி: சீன அதிபர் ஜி ஜின்பிங் ராணுவத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் சில தினங்களாக சுற்றுகின்றன. இது, உண்மையில்லை என்பதை உணர்த்த, வல்லரசு நாடான சீனா அமைதி காத்து வருகிறது. இந்தப் புரளியின் பின்னணியை ஆராய்ந்தால் இது, சீனாவை சீண்டிப் பார்க்கும் முயற்சியே தவிர வேறு ஒன்றுமில்லை எனத் தகவல்கள் கிடைக்கின்றன.
சீனாவில் ராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் செய்தி வெளியானது. இந்த செய்திக்கான காரணங்களில் ஒன்றாக, ஜெனிபர் ஜெங் என்பவரது ட்விட்டர் பதிவு இருந்துவிட்டது.
அமெரிக்கவாசியான அந்த சீனப்பெண் தனது ட்விட்டர் பதிவில், “சீன ராணுவத்தின் (பிஎல்ஏ) வாகனங்கள் செப். 22-ல் பெய்ஜிங்கை நோக்கிப் பயணிக்கின்றன. இந்தப் பயணம் பெய்ஜிங் அருகிலுள்ள ஹுனலாய் கவுன்ட்டி எனும் இடத்தில் தொடங்கி ஹெபாய் மாநிலத்தின் ஜங்கிலோக்கோய் நகரம் வரை 80 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் நீண்டுள்ளன. அதேசமயம் அதிபர் ஜி ஜின்பிங்கை பிஎல்ஏ தலைவர் பதவியிலிருந்து சிசிபி(சீன கம்யூனிஸ்ட் கட்சி) தலைவர்கள் நீக்கிய பின் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக புரளி உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு வேகம் அளிக்கும் வகையில் கார்டன் ஜி சாங் என்ற சர்வதேச எழுத்தாளரும் தனது கருத்தை வெளியிட்டார். இவர் சிறிய வீடியோவுடன் தனது ட்விட்டர் பதிவில், “சீன நாட்டின் மூத்த அதிகாரிகள் சிறைபடுத்தப்பட்ட பின், 59 சதவீதம் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டவுடன் ராணுவ வாகனங்கள் பெய்ஜிங் நோக்கி செல்லும் வீடியோ காட்சி. உள்ளே எங்கோ புகைகிறது. சீனா நிலைமை சரியில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.
கார்டன் ஜி சாங் இணைத்த வீடியோவில் ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு தெளிவாக இல்லாததுடன் உண்மைத் தன்மைக்கும் காட்சி ஆதாரங்கள் இல்லை. ஆனால், பெய்ஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் உள்நாட்டு விமானங்கள் வேறு சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி அதிபரின் நிலை இதுவாக இருக்கலாம் என்று செய்திகள் வெளியாயின. இவை புரளியை மேலும் வளரச்செய்தன. இந்த செய்திகள் மீது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் நம்பிக்கை வைத்து ‘ட்வீட்’ செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் சீனாவில் பணியாற்றும் இந்திய அதிகாரிகள் கூறும்போது, “இந்தப் புரளியின் தாக்கம் சீனாவில் சிறிதளவும் இல்லை. சீன மீடியாக்களும் இப்புரளியை சிறிதும் கண்டுகொள்ளவில்லை. எந்த ஒரு விவகாரத்தையும் அமெரிக்கா அல்லது ஐ.நா. சபை எழுப்பினால் மட்டுமே சீனா அதற்கு பதில் தரும் நிலைமை இந்நாட்டில் உள்ளது” என்று தெரிவித்தன.
இச்சூழலில் இப்புரளிக்கு காரணம் என்னவென்று ஆராய்ந்தால் பல முக்கியத் தகவல்கள் கிடைக்கின்றன. கடந்த 1949 முதல் கம்யூனிஸ நாடாக அறிவிக்கப்பட்டது சீனா. சீனாவை கம்யூனிஸ நாடாக உருவாக்கிய மா சே துங், நாட்டின் தந்தையாகப் போற்றப்படுகிறார். இவருக்கு பின் அந்நாட்டு அதிபராக வந்த எவரும் மா சே துங் அளவுக்கு சீனர்களால் போற்றப்பட்டதில்லை. இந்த வரலாற்றை மாற்றி தன் பெயரையும் நிலைநாட்ட தற்போது இரண்டாவது முறை அதிபராக இருக்கும் ஜி ஜின்பிங், முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அதிபராக முடியாது என்ற விதியிலும் ஜின்பிங் கடந்த ஆண்டு மாற்றம் செய்தார்.
எனவே அக். 9-ல் பெய்ஜிங்கில் தொடங்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது மாநாட்டில் 3-வது முறையாக ஜி ஜின்பிங் தேர்வாகும் வாய்ப்புகள் உறுதியாகி வருகின்றன. இதையடுத்து மா சே துங்கை போல் ஜின்பிங்கும் சீனாவில் புகழ் தேடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுக்கு தடை ஏற்படுத்தும் விதத்தில் சர்வதேச அளவிலான சதியாக இந்தப் புரளி சீனாவிலிருந்தே உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சீன அரசில் முக்கியப் பதவியிலிருந்த 2 மூத்த அமைச்சர்கள் மற்றும் 4 உயரதிகாரிகளுக்கு ஊழல் வழக்கில் சமீபத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியிருப்பதாகவும், கரோனா தொற்றை காரணம் காட்டி அதிபர் ஜின்பிங் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதையும் இணைத்து, சமூக வலைதளங்களில் கருத்துகள் புரளிகளாகி விட்டிருப்பதும் நேற்று முதல் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் இந்திய வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் எம்.கணபதி கூறும்போது, “இவை அனைத்தும் வதந்தியே. இதை கிளப்பியவர்கள் யார் எனத் தெரியவில்லை. அதிபர் ஜி ஜின்பிங், ஹாங்காங் போன்ற உள்நாட்டுக்கு சென்று வந்தாலும் அவர் 12 நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக்கொள்வது வழக்கம். இதை வைத்து சமூக வலைதளங்களில் வெளியான புரளிகளை இந்தியாவின் சில மீடியாக்கள் செய்தியாக்கின. மேலும், கட்சி மாநாட்டுக்கு புதிய உறுப்பினர்களை சீனா அறிவித்துள்ளது. இவை அதிபர் ஜி ஜின்பிங் எண்ணங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டது என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிபர் ஜின்பிங் பற்றிய செய்தி உண்மையில்லை என்பதற்கு இந்த நடவடிக்கையே பெரிய உதாரணம்” என்றார்.
இந்நிலையில், சீனாவின் அன்றாட வாழ்க்கையில் எந்த மாற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் கரோனாவால் தடை செய்யப்பட்ட வகுப்புகள் மீண்டும் நடைபெறத் தொடங்கியுள்ளன. இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மாணவர்கள் சீனா திரும்பி தம் வகுப்புகளை தொடரலாம் எனவும் சீன அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.