ஸ்ரீநகர்: ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் ஆப்பிளை ஏற்றிச் சென்ற லாரிகள் கடந்த ஒரு வாரமாக காத்திருக்கின்றன. இதனால், லாரிகளில் உள்ள ஆப்பிள்கள் அழுகி வருவதாக லாரி ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில், சமூக விரோத கும்பல்கள் ஆங்காங்கே மீண்டும் கல்வீச்சிலும் ஈடுபட்டு வருகின்றன. அந்தப் பகுதியில் சரக்கு லாரிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஏராளமான ஆப்பிள்களை ஏற்றிக் கொண்டு கிளம்பிய சரக்கு லாரிகள் ஸ்தம்பித்துள்ளன.
இதுகுறித்து லாரி ஓட்டுநர்கள் கூறும்போது, ‘‘அனந்தநாக் மிர் பஜாரில் இருந்து பனிஹால் சுரங்கப் பாதை வரையில் 40 கி.மீ நீளத்துக்கு ஆப்பிள் லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன. கடந்த ஒரு வாரமாக இந்தப் பாதையில் சரக்கு லாரிகள் செல்ல அனுமதிக்கப்படாததால் லாரியில் உள்ள ஆப்பிள்கள் அழுகி வருகின்றன. காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்படும் நிலையில், சரக்கு லாரிகள் செல்ல மட்டும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் லாரிகள் ஏன் நிறுத்தப்பட்டடுள்ளன என்பது குறித்து அவர்கள் உரிய விளக்கம் தரவில்லை. இதனால், ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான் வர்த்தகர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.
காஷ்மீர் போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெனரல் கடந்த சனிக்கிழமை ஆப்பிள் விவசாயிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஆப்பிள் சரக்கு லாரிகளை அனுப்பி வைப்பதற்கு சுமுக தீர்வு காணப்படும் என அவர்களிடம் உறுதியளிக்கப்பட்டது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே தேசிய நெடுஞ்சாலையில் வேண்டுமென்றே ஆப்பிள் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.