திருமலை: திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்ககூடிய நிலையில் பக்தர்கள் கூட்டம் இன்று காலை நிலவரப்படி குறைந்து காணப்பட்டது. நேற்று காலை முதல் இரவு வரை 52 ஆயிரத்து 682 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்களில் 15 ஆயிரத்து 805 பக்தர்கள் மொட்டையடித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி உள்ளனர்.
நேற்று ஒரே நாளில் தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ரூ.5.57 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தினர். வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசனம் மாற்றுதிறனாளிகள், மூத்தகுடிமக்களுக்கான தரிசனம் அனைத்து முன்னுரிமை தரிசனங்கள், ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்து ஒன்பது நாட்களுக்கு உண்டான டிக்கெட்டுகள் வழங்குவது அனைத்தும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இலவச தரிசனத்தில் மட்டும் இன்று முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை அனுமதிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள அனுமதிக்கப்படும் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதால் 1 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்து வருகின்றனர்.