Doctor Vikatan: கொரோனா தடுப்பூசி, ஃப்ளு தடுப்பூசிக்கு இடையே எத்தனை மாத இடைவெளி இருக்க வேண்டும்?

Doctor Vikatan: இதுவரை தடுப்பூசி பற்றியே நினைக்காத பலரும், கொரோனா காலத்தில் அது குறித்து யோசிக்க ஆரம்பித்தார்கள். ஒன்றுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டார்கள். இந்நிலையில் அடுத்து ஃப்ளு தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். கொரோனா தடுப்பூசிக்கும் ஃப்ளு தடுப்பூசிக்கும் இடையில் எத்தனை மாத இடைவெளி இருக்க வேண்டும்? யாருக்கெல்லாம் இந்தத் தடுப்பூசி அவசியம்? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்

பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்

பிறந்து 6 மாதங்களைக் கடந்த குழந்தை முதல், யார் வேண்டுமானாலும் இன்ஃப்ளுயென்ஸா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான நோய்கள் உள்ளவர்கள், நீரிழிவு, இதயநோய்கள், ஆட்டோஇம்யூன் நோய்கள் உள்ளவர்கள் அவசியம் ஃப்ளு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

6 மாதங்களுக்குக் குறைவான குழந்தைகள், ஃப்ளு தடுப்பூசியில் சேர்க்கப்படும் கெமிக்கல்களில் ஏதேனும் ஒன்றுக்கு ஒவ்வாமை இருப்பவர்கள், ஆபத்தான அலர்ஜி பாதிப்பு உள்ளவர்கள், முன்பு ஃப்ளு தடுப்பூசி போட்டுக்கொண்டு அதன் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் ஃப்ளு தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தவிர்க்கலாம்.

இவை தவிர நரம்புகளை பாதிக்கும் ‘குலியன் பாரி சிண்ட்ரோம்’ பிரச்னை உள்ளவர்களும் மருத்துவரின் ஆலோசனையின்றி ஃப்ளு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டாம். 6 மாதங்கள் முதல் 4 வயது வரையிலான குழந்தைகள், 50 வயதுக்கு மேலானவர்கள், நுரையீரல் மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகள் உள்ளவர்கள், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், கல்லீரல் பிரச்னை உள்ளவர்கள், நரம்பியல் பாதிப்பு உள்ளவர்கள், ரத்தம் தொடர்பான பாதிப்பு உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்கள், உதாரணத்துக்கு ஹெச்ஐவி தொற்றுள்ளவர்கள், கர்ப்பம் தரிக்கும் திட்டத்தில் இருப்பவர்கள் போன்றோர் அவசியம் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

Vaccination

பொதுவாக ஒரு தடுப்பூசிக்கும் இன்னொரு தடுப்பூசிக்கும் இடையில் 4 வார இடைவெளி இருக்குமாறு அறிவுறுத்துவோம். ஆனால் ஃப்ளு தடுப்பூசியையும் கொரோனா தடுப்பூசியையும் ஒரே நேரத்தில் போட்டுக்கொள்ளலாம். இரண்டையும் அப்படிப் போட்டுக்கொள்ளக்கூடாது என்பதற்கான ஆய்வுகள், புள்ளிவிவரங்கள் ஏதும் இல்லை என்பதால் ஒரே நேரத்தில் செலுத்திக் கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.