திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் இரண்டு பேரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது, இதில் ஒருவர் புதுக்கோட்டையை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வரும் நிலையில், சென்னையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பாலன் கொலை வழக்கில் தொடர்புடைய, திண்டுக்கல் கணேசன், புதுக்கோட்டை செந்தில்குமார் ஆகியோரிடம் விசாரணை நடைபெறுகிறது.
திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரான திருச்சியை சேர்ந்த ராமஜெயம், கடந்த மார்ச் 29, 2012 அன்று திருச்சியில் உள்ள கல்லணை அருகே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கை திருச்சி போலீசார் விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் ஏற்பட்ட தொய்வு காரணமாக, இந்த வழக்கு முதலில் சிபிசிஐடிக்கும், சிபிஐக்கும் மாற்றப்பட்டது. இருப்பினும் கொலையாளி குறித்த தகவல் கிடைக்காததால் இந்த வழக்கை உயர் நீதி மன்றம் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு சம்பந்தமாக சிசிடிவியில் பதிவான காரை வைத்து சோதனை நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்னர் கோவையில் சோதனை தீவிரமாக நடைபெற்ற நிலையில், தற்போது விசாரணையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி உள்ளனர்.