சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று திடீரென கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு நடைபெறும் சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர், கட்சியின் செயல்பாடுகள், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதிமுகவில் பழனிசாமி தரப்பில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டம் மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடி இருந்தாலும், சென்னை உயர் நீதிமன்ற அமர்வின் தீர்ப்பு பழனிசாமி தரப்பினருக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் அளித்துள்ளது.
அதிமுக அலுவலகத்தைக் கடந்த ஜூலை 11-ம் தேதி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கி சேதப்படுத்தியதாக பழனிசாமி தரப்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்படாமல் இருந்தது. தடயங்கள் சேகரிப்புப் பணி நடைபெறாமல் இருந்ததால் கட்சி அலுவலகத்துக்கு பழனிசாமி செல்லாமல் இருந்தார்.
அண்மையில் சிபிசிஐடி போலீஸார் ஆய்வு செய்து, தடயங்களைச் சேகரித்த நிலையில், கட்சி அலுவலகம் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. அப்பணிகளைப் பார்வையிட, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று திடீரென கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளை நிர்வாகிகளுடன் பார்வையிட்டார். பழனிசாமி வருகைக்கு ஓபிஎஸ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கலாம் எனக் கருதி, இரு தரப்பினரிடையே மோதலை தவிர்க்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, திமுக ஆட்சியில் உள்ள குறைபாடுகள், மின் கட்டண உயர்வுக்கு எதிராக அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அதிமுகவின் செயல்பாடுகள், திமுக அரசு மீது மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தலை 4 மாதங்களுக்குள் நடத்துவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதை அக்டோபர் மாதம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள மாவட்டச் செயலர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அலுவலகத்தைச் சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில், ஓபிஎஸ் தரப்பினர் தண்டனை பெறும் வகையில் வலுவான ஆதாரங்களை சிபிசிஐடி போலீஸாரிடம் அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், அனகாபுத்தூர் பகுதி மாணவர் அணியைச் சேர்ந்த செவன் ஏற்பாட்டில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பழனிசாமியை சந்தித்து தங்களைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர். அப்போது முன்னாள் எம்பிக்கள் எஸ்.ஆர்.விஜயகுமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.