ராமநாதபுரம்: அதிமுக மாநிலங்களவை உறுப்பினரின் உறவினர் வாளால் தாக்கப்பட்ட சம்பவம், முதுகுளத்தூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் கோகுலகண்ணன். இவர், அதிமுக நியமன எம்பியும் ஓபிஎஸ் சின் தீவிர விசுவாசியுமான தர்மரின் சகோதரியின் மகன் ஆவார். சொந்த ஊரான புளியங்குடியில் தர்மர் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று அந்த வீட்டின் அருகே ஒரு கார் அதிவேகமாக வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த எம்.பி தர்மர் அவர்கள் யார் என கோகுலகண்ணனிடம் விசாரிக்க சொல்லியுள்ளார்.
கோகுலகண்ணன் காரை மறித்து விசாரித்த போது காரில் வந்த கும்பல் கோகுலகண்ணனை பேச விடாமல் வாளால் வெட்டியுள்ளனர். அப்போது கையால் அவர் தடுத்துள்ளார். இதனால், கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. காயம் ஏற்பட்ட கோகுல கண்ணனை முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கோகுலகண்ணனின் அண்ணன் ராமமூர்த்தி என்பவர் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதுகுளத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
அதிமுக உட்கட்சி குழப்பத்தில் இரண்டு விரிவாக செயல்பட்டு வருகிறது. மேலும் இரு தரப்பினரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளரான நியமன எம்பி தர்மரை தன் பக்கம் இழுக்க இபிஎஸ் தரப்பினர் மறைமுகமாக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர்.
ஆனால் சாதாரண ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்த தம்மை, டெல்லி வரை செல்லும் வாய்ப்பினை தந்த ஓபிஎஸ்ஐ விட்டு வரமாட்டேன் என உறுதியாக இருப்பவர் தமிழக எம்.பி தர்மர். இந்த நிலையில் அவருடைய இல்லம் அருகே வந்த மர்ம காரில் இருந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரின் உறவினரும் தீவிர விசுவாசியமான ஒரு இளைஞரை வாளால் வெட்டிச் சென்ற சம்பவம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.