புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளியை மூட வற்புறுத்திய பாஜகவினரை சூழ்ந்து கொண்டு வெளியே போ, வெளியே போ என பெற்றோர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்து மதம் பற்றி தவறாக பேசப்பட்டு விட்டதாக கூறி புதுச்சேரியில் இந்து முன்னணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் வழக்கம் போல் அன்றாட பணிகள் தொடர்கின்றன. இந்த நிலையில் உப்பளத்தில் உள்ள தனியார் பள்ளிக்குள் புகுந்த பாஜகவினர் சிலர் பள்ளியை விடுமுறை அறிவித்து மூடுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் காலாண்டு தேர்வு நடைபெறுவதால் விடுமுறை அளிக்க முடியாது என பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது.
இந்த நிலையில் பிள்ளைகளை பள்ளியில் விட்டுச்சென்ற பெற்றோர்கள் பாஜகவினரின் செயலை கண்டு அவர்களை சூழ்ந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளியை விட்டு வெளியே போ, வெளியே போ என்று பெற்றோர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற முதலியார்பேட்டை போலீசார் பள்ளியில் இருந்து பாஜகவினரை வெளியேற்றினர். இதனிடையே வில்லியனூரில் சென்னை- விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்துகளையும் வழிமறித்து சிலர் கல்வீசி தாக்கினர். இந்த சம்பவத்தில் 4 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் முழுவதும் உடைந்து சேதமடைந்தன. இது தொடர்பாக ஓட்டுனர்கள் அளித்த புகாரின் பேரில் கல்வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.