ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.
சச்சின் பைலட்டை அடுத்த ராஜஸ்தான் முதல்வராக்க காங்கிரஸ் தலைமை அளித்த அறிவுரையை அசோக் கெலாட் ஏற்காததால், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி கடும் கோபத்தில் உள்ளார் என்றும், விரைவில் கெலாட் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் புதிய தலைமுறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி சச்சின் பைலட்டை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தலைமை மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அஜய் மாக்கன் ஆகியோரை அனுப்பி வைத்திருந்தது. இதற்கான முடிவுகளை எடுக்க சோனியா காந்திக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது காங்கிரஸ் தலைமையின் திட்டம். ஆனால் அசோக் கெலாட் ஆதரவாளர்கள் கூட்டம் நடக்காமல் தடுத்து, சச்சின் பைலட் முதல்வராக கூடாது என வலியுறுத்தி, கட்சித் தலைமையின் திட்டத்தை சிதைத்து விட்டனர்.
அசோக் கெலாட் மிகவும் தந்திரமாக ஜெய்ப்பூர் நகரில் இல்லாமல் வழிபாட்டுக்காக வெளியூர் சென்று விட்டார் என்றும், அவருடைய விருப்பப்படியே சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தலைமையின் திட்டத்தை முறியடித்தனர் எனவும், மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அஜய் மாக்கன் டெல்லியில் சோனியா காந்தியிடம் தெரிவித்துள்ளனர். ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற திட்டத்தின் படி எழுத்துப்பூர்வமாக ஜெய்ப்பூரில் நடந்த சம்பவங்கள் குறித்து அறிக்கை அளிக்குமாறு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
ஒழுங்கு நடவடிக்கை எடுத்து ராஜஸ்தான் முதல்வர் பதவியில் இருந்து அசோக் கெலாட்டை நீக்க வேண்டும் என்பது காங்கிரஸ் தலைமையின் திட்டம். அத்துடன் ஏற்கெனவே திட்டமிட்டபடி அசோக் கெலாட்டை காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வர வேண்டாம் எனவும் மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு அறிவுரை அளித்துள்ளனர். ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய அசோக் கெலாட் மறுக்கிறார் என்றும், சச்சின் பைலட் கட்சித் தலைமையின் திட்டப்படி முதல்வராவதை தடுக்க சதி செய்துள்ளார் எனவும் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு தகவல் அளித்துள்ளனர்.
அசோக் கெலாட் டெல்லியில் சோனியா காந்தியையும் பின்னர் கேரளாவில் ராகுல் காந்தியையும் சந்தித்தபோது ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டார் எனவும், பின்னர் ஜெய்ப்பூர் சென்று சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா மிரட்டல் மூலமாக பெரிய பிரச்சனையை உருவாக்கி விட்டார் எனவும் காங்கிரஸ் தலைவர்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர். சோனியா காந்தியின் அதிகாரத்தை அசோக் கெலாட் கேள்விக்குறியாகிவிட்டார் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
சோனியா காந்தி டெல்லியில் அசோக் கெலாட்டுடன் ஆலோசனை நடத்தி அவரை கட்சித் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும்படி அறிவுரை அளித்திருந்தார். “ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே” என சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் உதய்ப்பூர் மநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுப்படி, அசோக் கெலாட் ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது சோனியா காந்தியின் விருப்பம். முன்பு ராஜஸ்தான் மாநில துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டை முதல்வராக்கி, அடுத்த வருடம் நடைபெற உள்ள ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை அவர் தலைமையில் ஒருங்கிணைக்க வேண்டும் என கட்சி தலைமை விரும்பியது.
ஆனால் ஒருவருக்கு ஒரு “பதவி மட்டுமே” என்கிற விதியிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அசோக் கெலாட் விரும்பினார். காங்கிரஸ் தலைமை இந்த கோரிக்கையை ஏற்க மறுத்ததால், தனக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களை தூண்டிவிட்டு பெரிய சிக்கலை உருவாக்கி விட்டார் என மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். எதுவும் என் கையில் இல்லை எனவும், ஏற்கனவே சச்சின் பைலட் எடுத்த நடவடிக்கைகளால் சட்டமன்ற உறுப்பினர்கள் கோபமாக உள்ளனர் எனவும் அசோக் கெலாட் விளக்கம் அளித்துள்ளார்.
சச்சின் பைலட் துணை முதல்வராக இருந்தபோது அவருக்கும் அசோக் கெலாட் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. கெலாட்-பைலட் பிரச்னைகள் ராஜஸ்தான் அரசு கவிழ்ந்து விடுமோ என கேள்வி எழுந்த நிலையில் காங்கிரஸ் தலைமை சமரசம் செய்து வைத்தது. அதன்படி பைலட் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அந்த மோதலை காரணமாக வைத்து அசோக் கெலாட் முதல்வர் பதவியை தக்க வைக்க நாடகம் ஆடுகிறார் என்பது காங்கிரஸ் தலைமையின் குற்றச்சாட்டு.
அசோக் கெலாட் இப்படி கட்சித் தலைமைக்கு எதிராக செயல்படுவார் என கணிக்க கட்சி தலைமை தவறிவிட்டது எனவும் மிகவும் நம்பிக்கையானவர் என கருதி அவரை கட்சித் தலைவர் பதவியில் அமர வைக்க திட்டமிட்டது தவறு எனவும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர்.
– கணபதி சுப்ரமணியம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM