ஸ்டாலினுக்கு புது நெருக்கடி… தனியாரிடம் இருந்து கைமாறுமா காலை சிற்றுண்டி திட்டம்?

தமிழகத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த 1920ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது தான் மதிய உணவுத் திட்டம். முதல்கட்டமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரால் மதிய உணவுத் திட்டம் படிப்படியாக மேம்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் முதல்வர்

தலைமையிலான திமுக அரசு காலை சிற்றுண்டி திட்டம் என்ற மகத்தான திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இதில் வாரத்தின் ஐந்து நாட்களும் உப்புமா, கிச்சடி, கேசரி, காய்கறி சாம்பார், பொங்கல் என கலவையான உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் தனியார் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் தனித்தனியே தனியார் நிர்வாகத்தினர் இதனை செயல்படுத்தி வருகின்றனர். இந்த விஷயத்திற்கு அங்கன்வாடி மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்து சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

காலங்காலமாக பள்ளிக் குழந்தைகளுக்கு முறையாக சமைத்து உணவளித்து வரக்கூடிய எங்களுக்கு வழங்க ஏன் அரசு முன்வரவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர். இதுதொடர்பாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணா உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். காலை சிற்றுண்டி திட்டம் தொடர்பாக சத்துணவு அமைப்பாளர்கள் கூறுகையில், நாங்கள் ஏற்கனவே பள்ளி குழந்தைகளுக்காக மதிய உணவை சமைத்து அளித்து கொண்டிருக்கிறோம்.

1982ஆம் ஆண்டு முதல் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். 40 ஆண்டுகளாக சிறப்பான முறையில் நடத்தி வரும் எங்களிடம் காலை சிற்றுண்டி திட்டத்தை கொடுத்திருக்கலாம். இதனை தனியாரிடம் ஒப்படைத்திருப்பதால் அவர்கள் வேறொரு இடத்தில் சமைத்து வாகனங்கள் மூலம் பள்ளிக்கு கொண்டு வர வேண்டும். இதனால் செலவுகள் தான் அதிகம் ஏற்படும். எங்களிடம் சமையலர்கள், உதவியாளர்கள், சமையல் பாத்திரங்கள், மின்சார வசதி, கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்டவை இருக்கின்றன.

எனவே சிறப்பாக சமைத்து தர முடியும். ஏற்கனவே ஒரு குழந்தைக்கு இரண்டே கால் ரூபாயில் சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறோம். அதுவே காலை சிற்றுண்டி திட்டத்திற்கு எட்டே கால் ரூபாய் அரசால் அளிக்கப்படுகிறது. அந்த தொகையை எங்களிடமே கொடுத்தால் வருமானமும் கிடைக்கும். ஏற்கனவே இருக்கும் அனுபவத்தின் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு சிறப்பான முறையில் சமைத்து தர முடியும்.

தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதில் எங்களுக்கு வருத்தம் தான். லாப நோக்கோடு செயல்படும் தனியாரை விட எங்களால் நன்றாக செயல்பட முடியும் என்று தெரிவித்தனர். மேலும் சிலர், தனியாரிடம் ஒப்படைத்தால் தான் கமிஷன் பார்க்க முடியும் என்ற காரணம் கூட பின்னால் இருக்கலாம். அரசு நன்றாக ஆலோசித்து சத்துணவு அமைப்பாளர்கள் கைகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதன்மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.