ரூ.200 கோடி மிரட்டி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். திகார் சிறையில் சுகேஷ் இருந்த போது அவரை பாலிவுட் நடிகைகள் பலர் நேரில் வந்து சந்தித்து பேசிவிட்டு சென்றுள்ளனர். சுகேஷ் திகார் சிறையில் தனக்கென தனியாக அலுவலகம் ஒன்றை வைத்திருந்தான். சிறைக்கு அவனை பார்க்க வருபவர்கள் அந்த அலுவலகத்தில்தான் சுகேஷை சந்தித்து பேசுவது வழக்கம். தற்போது திகார் சிறையில் இருந்து வேறு சிறைக்கு சுகேஷ் மாற்றப்பட்டுள்ளார். சுகேஷ் மீதான வழக்கை அமலாக்கப்பிரிவும், டெல்லி போலீஸாரும் சேர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சுகேஷிடம் அதிக அளவில் பரிசுப்பொருட்கள் பெற்ற நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா மற்றும் சிறிய நடிகைகள் பலரிடம் டெல்லி போலீஸாரும், அமலாக்கப்பிரிவும் விசாரித்து வாக்குமூலம் வாங்கியிருக்கின்றனர். நடிகை சோபியா சிங், நிக்கி தம்போலி ஆகியோரும் சிறையில் சுகேஷை சந்தித்து பேசி பரிசும், பணமும் பெற்றுள்ளனர். அவர்கள் இரண்டு பேரையும் டெல்லி போலீஸார் சிறைக்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். சிறையில் எப்படி சந்திப்பு நடந்தது என்பது குறித்து இரு நடிகைகளும் போலீஸாரிடம் தெரிவித்தனர்.
நடிகைகள் இருவரும் எப்படி சுகேஷை சந்தித்து பேசினர் என்ற விபரத்தை நடித்து காட்டிய போது அதனை போலீஸார் வீடியோ எடுத்துக்கொண்டனர். இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், “சிறையில் பல நடிகைகள் சுகேஷை சந்தித்து பேசியுள்ளனர். அதில் எங்களது விசாரணைக்கு ஒத்துழைக்கும் நபர்களை மட்டும் விசாரணைக்கு அழைத்து சென்று விசாரித்து வருகிறோம். நேரடியாக நடிகைகள் வந்து நடித்துக்காட்டும் போது குற்றத்தின் தன்மையை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. சுகேஷ் சிறைக்குள் தனியாக ஏற்பாடு செய்திருந்த அறையில் சோஃபா, டிவி போன்ற அலுவலகத்திற்கு தேவையான அனைத்தும் இடம் பெற்று இருந்தது. சிறை அதிகாரிகள் விதிகளை மீறி ஆடம்பர கார்களை சிறைக்குள் அனுமதித்துள்ளனர். சுகேஷை சந்திக்க வருபவர்களிடம் எந்த வித சோதனையும் நடத்தப்படவில்லை. இதற்காக சுகேஷ் சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளார்” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
தன்னை சந்திக்க வரும் விஐபிக்களிடம் தன்னை தென்னிந்திய தொழிலதிபர் என்றும், திரைப்பட தயாரிப்பாளர், டிவி சேனல் உரிமையாளர் என்று சொல்லி அறிமுகம் செய்து கொள்வார் சிகேஷ் என்று டெல்லி சிறப்பு கமிஷனர் ரவீந்திர யாதவ் தெரிவித்தார்.