நாமக்கல் காவல் உட்கோட்டத்தின் சார்பில் நாமக்கல்லில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில், ஒன்பது காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வந்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். எளிதில் தீர்க்கக்கூடிய பணம் கொடுக்கல்-வாங்கல், நிலத்தகராறு, வாய்த்தகராறு உள்ளிட்ட சிறிய பிரச்னைகள் தொடர்பாக, 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன. மற்ற மனுக்களுக்கு விசாரணைக்குப் பிறகு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட இருப்பதாக, காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நாமக்கல் டி.எஸ்.பி அலுவலகத்தில், டி.எஸ்.பி சுரேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பில்,
“நாமக்கல் உட்கோட்ட காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் சிறு, சிறு பிரச்னைகளை தீர்க்க இதுபோன்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனால், பொதுமக்கள் ஆர்வமாக வந்து மனுக்களை அளித்து வருகின்றனர். காவல்துறையினரின்மீது பொதுமக்களுக்கு பெரிய நம்பிக்கை ஏற்படும்விதமாக இந்த செயல்பாடு அமைந்திருக்கிறது. அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையை முழுமையாக தடுக்க, காவல்துறை சார்பில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குற்றச் சம்பவங்களைக் குறைக்க 28 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். ரூ.2.43 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டிருக்கிறது. தவறான நடத்தை கொண்ட 480 பேரிடமிருந்து போலீஸார் மூலம் நன்னடத்தை பத்திரம் எழுதி வாங்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, அவர்கள் தவறான நடத்தையில் ஈடுபட்டால் 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். நாமக்கல் நகரை பொறுத்தவரை, குற்றச் சம்பவங்களைக் கண்காணிக்க 157 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும், வாகனத்தின் பதிவுகளை கண்டறியும், அதிநவீன கேமராக்கள் 4 இடங்களில் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதன்மூலம், வாகனங்களில் தப்பிச் செல்லும் நபர்களை எளிதாகப் பிடிக்க முடியும். நாமக்கல்லில் போதைப்பொருள்கள் கடத்தல் வழக்கில் ஈடுபட்ட 11 பேரின் ரூ.2,43,00,000 மதிப்பிலான சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் கஞ்சா, குட்கா கடத்தலில் ஈடுபடுவோரின் சொத்துகள் முடக்கப்பட்டு அவர்கள்மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமில்லாமல், குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்களை சில்லறையில் விற்பனை செய்யும் கடைகள் சீல் வைக்கப்படும். அது போன்று 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
பெட்டிக்கடையிலும் இதுபோன்ற விற்பனை நடைபெறுவது தெரியவந்தால், உடனடியாக அந்த கடைகள் சீல் வைக்கப்படும். நாமக்கல் நகரில் நவீன ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. 24 மணி நேரமும் அந்த வாகனம் நகரின் அனைத்து பகுதிகளிலும் ரோந்து சென்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா விற்பனை மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள்மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதனால், பொதுமக்கள் அச்சமின்றி இருக்கலாம்” என்றார்.