அதிமுகவின் அரசியல் ஆலோசகராக ஓ.பன்னீர்செல்வம் நியமனம் செய்த பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவில் இருந்து நீக்கி இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடிபழனிசாமி ஆகிய இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டதையடுத்து அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை இபிஎஸ் தரப்பு நீக்குவதும், இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை ஓபிஎஸ் தரப்பு நீக்குவதும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். கழக உடன் பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்தில், பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டுப்பாடுகளை மீறி கட்சியின் பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதால் பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.