இந்தியாவும், பாகிஸ்தானும் எங்கள் நட்பு நாடுகளே: ஜெய்சங்கருக்கு அமெரிக்கா பதில்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு வெவ்வேறு புள்ளிகளில் முக்கியத்துவம் வாய்ந்த தங்களின் நட்பு நாடுகள் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எப்-16 போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானிற்கு ராணுவ உதவிகள் வழங்குவதை முந்தைய அதிபர் டிரம்ப் நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது ஜோ பைடன், போர் விமானம் வழங்க ஒப்புதல் வழங்கியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே கலந்துரையாடிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்க இருக்கும் ராணுவ உதவிக்கு கூறும் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. எப்-16 விமானம் யாருக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்று அனைவருக்கும் தெரியும்.

பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்காகவே பாகிஸ்தானுக்கு போர் விமானம் வழங்க ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க அரசு கூறுவதை ஏற்க முடியாது. இந்த மாதிரி காரணங்களைக்கூறி அனைவரையும் முட்டாளாக்க வேண்டாம்’ எனத் தெரிவித்திருந்தார்.

latest tamil news

இதுகுறித்து செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றில் பேசிய அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ் கூறியதாவது: இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுடனான எங்களது உறவுகளை நாங்கள் இணைத்துப் பார்க்க விரும்பவில்லை.

இந்தியாவும், பாகிஸ்தானும் இரண்டு வெவ்வேறு முக்கியமான புள்ளிகளில் எங்களுடைய நட்பு நாடுகளாகும். இரு நாடுகளுடனும் நட்பின் அடிப்படையில் வளங்களையும், தகவல்களையும் பரிமாறிக்கொள்கிறோம். இந்தியாவுடனான எங்களின் உறவு தனித்துவமானது. பாகிஸ்தானுடனான எங்களின் உறவும் தனித்துவமானது. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.