மாஸ்கோ : ரஷ்ய பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு மாணவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 21 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மர்ம நபர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரஷ்யாவின் மத்திய பகுதியில் உள்ள இசேவ்ஸ்க் நகரில் இருக்கும் ஒரு பள்ளிக்கு மர்ம நபர் ஒருவர் நேற்று காலை வந்தார்.உள்ளே நுழைந்த அவர், திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, மாணவர்களை நோக்கி சரமாரியாக சுடத் துவங்கினர்.குண்டு பாய்ந்த பல மாணவர்கள் சுருண்டு விழுந்தனர். மற்றவர்கள் தலைதெறிக்க ஓடினர். பின், அந்த நபர் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்தார்.
அவரது சட்டையில் ‘நாஜி’ சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது.தகவல் அறிந்து வந்த போலீசார் காயம் அடைந்து கிடந்த 21 பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு மாணவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸ் அறிவித்துள்ளது. விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
5 மீட்புப் படையினர் உயிரிழப்பு
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் வடக்குப் பகுதியில் உள்ள கியூசோன் மாகாணத்தில் இருக்கும் பர்தியோஸ் நகரில், சக்தி வாய்ந்த ‘நோரு’ சூறாவளிப்புயல் நேற்று கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 195 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புப் படையினர் சென்ற படகு மீது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் படகில் சென்ற ஐந்து வீரர்கள் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
தீயில் சிக்கி 7 பேர் மரணம்
கிழக்காசிய நாடான தென்கொரியாவின் டேஜியோன் நகரில் உள்ள வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் நேற்று காலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி மாலையில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில்,பாதுகாப்பு பணியில் இருந்த ஏழு ஊழியர்கள் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இதே விபத்து வணிக வளாகத்தின் வேலை நேரத்தில் ஏற்பட்டு இருந்தால் உயிர்ச்சேதம் மிகவும் அதிகமாகி இருக்கும். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement