தனியார் ஆம்னி பேருந்துகள் சேவையின் அடிப்படையில் இயங்குவதில்லை எனவும், அதுவும் ஒரு தொழில் என்பதால், அவர்களின் தொழிலுக்கு பாதிப்பு வராத வகையில் தான் கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவிப்பார்கள் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், விழாகால நேரங்களில் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டண பிரச்சினைகள் வராமல் இருக்க பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
வரும் காலத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பிரச்சனை வராமல் இருக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பல்வேறு வித பேருந்துகளுக்கு பல்வேறு வித கட்டணங்கள் நிர்ணயிக்க வேண்டி உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறினார்.
இருந்தாலும் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாத அளவிற்கு கட்டணம் நிர்ணயம் செய்து பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். அரசுப் பேருந்து கட்டணத்தை ஒப்பிட்டு தனியார் ஆம்னி பேருந்து கட்டணத்தை பார்க்க வேண்டாம். கட்டணம் குறித்து ஓரிரு நாட்களுக்குள் ஒரு தீர்வை அளிப்பதாக ஆம்னி பேருந்து நிர்வாகிகள் கூறி இருக்கிறார்கள். கட்டணத்தை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களே அதை நிர்ணயித்து ஓரிரு நாட்களுக்குள் அறிவிப்பார்கள்.
மற்ற நாட்களை விட விழா காலங்களில் தான் வாகனம் முழுமையாக இயங்குவதாக கூறியிருக்கிறார்கள். அரசு எல்லா சேவைகளையும் வழங்க முடியாது என்பது உண்மை. இரவு நேரங்களில் அரசுப் பேருந்துகள் இயங்குவது தமிழ்நாட்டில் தான். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தான் அரசுப் பேருந்து கட்டணம் குறைவு. அரசு விரைவுப் பேருந்துகளிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்படுகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு 1400 ஆம்னி பேருந்துகள் தான் இயங்குகிறது.
பயணிகள் கட்டணத்தை தெரிந்தே தான் பேருந்துகளை முன்பதிவு செய்து பயணிக்கிறார்கள். கட்டண உயர்வு ஏழை எளிய மக்களை பாதிப்பதில்லை. ஆம்னிப் பேருந்துகள் சேவையின் அடிப்படையில் இயங்க முடியாது. அவர்களும் ஒரு தொழில் செய்கிறார்கள். அவர்களுக்கும் பாதிப்பு வராத வகையில் தான் கட்டண நிர்ணயம் செய்து அறிவிப்பார்கள்.
21,000 அரசுப் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது முழுமையான சேவையை நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம் பொதுமக்கள் அரசு பேருந்துகளில் பயணிக்கிறார்கள். அரசுப் பேருந்தில் பயணிக்காமல் தெரிந்தே பதிவு செய்து தனியார் பேருந்தில் பயணிக்கிறார்கள்” இவ்வாறு அவர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM