புதுடெல்லி: அரசியல் சாசன அமர்வுகள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணையை யூடியூப் மூலம் நேரலையில் ஒளிபரப்பும் பணியை தொடங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். யூடியூப் மூலம் ஒளிபரப்பு செய்வது தற்காலிகம் என்றும், விரைவில் பிரத்யேக தளம் மூலம் இந்த நேரலை பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
உச்ச நீதிமன்றத்தில் இன்று அரசியல் சாசனம் தொடர்பாக மூன்று அமர்வுகளில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அதில் மகாராஷ்டிரா மாநிலம் சிவசேனா கட்சியின் விவகாரமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே என இருவரது தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில், அனைத்து அரசியல் அமர்வுகளின் வழக்கு விசாரணையும் செப்டம்பர் 27 முதல் நேரலையில் ஒளிபரப்ப ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் தற்போது நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மக்கள் தங்கள் வசம் உள்ள செல்போன், லேப்டாப் போன்ற சாதனங்களின் மூலம் எந்தவித இடையூறும் இல்லாமல் அதனை நேரலையில் பார்க்கலாம்.
நான்கு ஆண்டுகளுக்கு (2018) முன்னர் இதே நாளில் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்பலாம் என தீர்ப்பு வழங்கி இருந்தார். முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் நீதிமன்றத்தை நாடி இருந்தார். அதன்பேரில் கடந்த ஆகஸ்ட் 26 வாக்கில் முதல் முறையாக அப்போதையை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் வழக்கு விசாரணை வெப்காஸ்ட் போர்ட்டல் மூலம் ஒளிபரப்ப பட்டது குறிப்பிடத்தக்கது.
வரும் நாட்களில் அரசியல் சாசன அமர்வில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளன. இதில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான மனு மீதான விசாரணைகள் விசாரணைக்கு வரவுள்ளன.