காசிமேடு: டன் கணக்கில் கசிந்த கச்சா எண்ணெய்; பாதாள சாக்கடை நீருடன் கலந்து ஓடிய அவலம்!

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே பூமிக்கு அடியில் போடப்பட்ட ராட்சத குழாயில் தீடீரென கசிவு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியில் K.T.V. எண்னெய் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கு கடந்த 2015ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கிற்கு வெளிநாடுகளில் இருந்து கடல் மூலம் வரக்கூடிய பாமாயில் தயாரிப்பதற்கான கச்சா எண்ணெய் என்பது இரண்டு ராட்சத குழாய் மூலம் சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவிற்கு பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு அதன் வழியே அனுப்பப்பட்டு வருகிறது. சென்னை திருச்சினாங்குப்பம் பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து லாரி வழியாக குமிடிபூண்டியில் உள்ள நிறுவனத்திற்கு லாரி வழியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு பாமாயில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
image
இந்த நிலையில், சென்னை காசிமேடு படகுகள் பழுது பார்க்கும் இடத்தின் அருகே அமைந்துள்ள மழை நீர் வடிகால் பைப் வழியாக தண்ணீரோடு சேர்த்து பாமாயில் தயாரிப்பதற்கான கச்சா எண்ணெய் நேற்று மாலை முதல் வெளியேற துவங்கியுள்ளது. இதனை பார்த்த அங்கிருந்த மீனவர்கள் உடனடியாக நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இருப்பினும் உடனடியாக நடவடிக்கை எடுக்காததால் கிட்டத்தட்ட 1 டன் அளவிற்கு கச்சா எண்ணெய் வெளியேறியுள்ளது. அதன்பின் இன்று காலை சம்பவ இடத்திற்கு வெளியேறிய கச்சா எண்ணெய் அகற்ற சென்ற தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியில் இருந்த மீனவர்கள் சார்பில் அவர்களிடம் `இவ்வளவு நேரமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்ற சம்பவங்களுக்கு முறையாக பதில் அளித்தால் மட்டுமே அகற்ற விடுவோம்’ என சொல்லப்பட்டுள்ளது. மேலும் அந்த ஊழியர்களை, மீனவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் இன்று காலை முதல் நண்பகல் 12 மணி கச்சா எண்ணெய்யை அகற்றும் பணியில் குழப்பம் ஏற்பட்டது.
அதன் பின் சம்பவ இடத்திற்கு சென்ற அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கு கச்சா எண்ணெய்யை அகற்றுவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை குறித்து கேட்டறிந்து, பின்னர் எண்ணெய் நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் மீனவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
image
பின்னர் பேசுகையில், `கச்சா எண்ணெய் எப்படி மழை நீர் வடிகாலில் கலந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, ஒரு மணி நேரத்தில் இந்த பகுதியில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் அகற்றும் பணி நடைபெற்று முடியும் என்றும் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்’ என அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து பேசிய நிர்வாக ஊழியரொருவர், `நேற்று மாலை 7 மணிக்கு எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த ராட்சத குழாய் மூலம் வந்த கச்சா எண்ணெயை நிறுத்திவிட்டோம். இதனால் மற்றொரு குழாய் மூலம் மட்டுமே தற்போது எண்ணெய் செல்கிறது. மாதம் ஒரு முறை இந்தக் குழாயில் பழுது பார்ப்போம். இச்சம்பவம் எப்படி நடந்தது என தெரியவில்லை. பழுது ஏற்பட்ட இடத்தை கண்டறிந்துவிட்டோம். இன்று மாலைக்குள் அனைத்து பணிகளும் முடிவடையும்’ என தெரிவித்தார்.
image
கிட்டத்தட்ட 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராட்சத குழாய் மூலம் டன் கணக்கில் தினம்தோறும் எண்ணெய் செல்லும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும் ஒரு சிறிய ஓட்டையின் மூலம் வெளியேறிய இந்த கச்சா எண்ணெய் பெரிய அளவில் வெளியேறி கடலில் கலந்திருந்தால் என்ன ஆகி இருக்கும், கடலுக்கு சென்று கலக்கும் பாதாள சாக்கடையில் இந்த கச்சா எண்ணெய் கலந்தது எப்படி என்றும், பாதாள சாக்கடை – கச்சா எண்ணெய் குழாய் இரண்டும் எப்படி அருகில் அமைந்தது என பல்வேறு கேள்விகளுக்கான பதிலை அரசு விசாரித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.