கரூர் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை என குளித்தலையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் குளித்தலை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும் கரூரில் மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்டதற்கு பிறகு இரண்டாவது நிலையில் உள்ள நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது விதி.
அந்த அடிப்படையில் குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தியதாக தமிழக சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்நிலையில் குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனைதான் என்ற அறிவிப்பு வெளியானதால் அன்று முதல் சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதன் காரணமாக குழப்பமான சூழ்நிலை நீடிப்பதால், குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனை என்றால் அதற்கு ஏன் இன்னும் பெயர் பலகை வைக்கவில்லை என்ற ஒரு சர்ச்சையும் பொதுமக்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் குளித்தலை நகர் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ‘காணவில்லை…தமிழக அரசே! கண்டுபிடித்து கொடு!! குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை! திருடி சென்றவர்களை கண்டுபிடித்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து எங்கள் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை குளித்தலை மக்களிடம் ஒப்படைத்திடு இப்படிக்கு, தேடிக் கொண்டிருப்பவர்கள், பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சிகள், சமூக நல இயக்கங்கள் சமூக ஆர்வலர்கள், குளித்தலை.’ என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.