ரஷ்ய ராணுவத்தால் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட உக்ரைன் ராணுவ வீரரின் புகைப்படம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர் 7 மாதங்களை கடந்து நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் வெற்றி பெற்ற ரஷ்யா தற்போது பின்னடைவை சந்தித்து வருகிறது. அதனால் 2 லட்சம் வீரர்களை ராணுவத்தில் சேர்க்க அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் ரஷ்யாவை சேர்ந்த ஆண்கள் போலந்து நாட்டிற்கு சென்று தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில், போரில் ரஷ்ய ராணுவத்திடம் சிக்கிக் கொண்ட உக்ரைன் ராணுவ வீரர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஏற்பட்ட அவல நிலை குறித்து உக்ரைன் ராணுவமே வருத்தத்துடன் பதிவு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட அந்த வீரரின் பெயர் மைகிலோ தினாவோ. இவர் ரஷ்ய ராணுவத்தினரால் மூன்றாம் தர சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
தற்போது பரிதாபத்திற்குரிய நிலையில் எலும்பும் தோலுமாக உள்ளார். இவரது கை, கால், முகம் என அனைத்து பகுதிகளிலும் பெரும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவரின் கைகளில் ஆணியை செலுத்தி கொடிய சித்திரவதைகளை செய்துள்ளனர்.
இதனால் அவருக்கு கை பகுதியில் 4 செ.மீ எலும்பு இல்லாமல் போனது. இந்த உடம்பை வைத்துக்கொண்டு அறுவை சிகிச்சை செய்வது உயிருக்கே ஆபத்தாய் முடிந்து விடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர் . உடல் எடையை அதிகரித்தபின்னரே அறுவை சிகிச்சைகள் செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.
இந்த புகைப்படம் உலக அளவில் வைரலாகி வருகிறது. ஜெனிவா ஒப்பந்தத்தை சிறிதும் மதிக்காமல் ரஷ்யா தனது நாஜி தனமான வேலையை தொடர்ந்து செய்து வருவது வெட்கக்கேடானது என்று உக்ரைன் விமர்சித்துள்ளது.
newstm.in