நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 22ஆம் தேதி பாப்புலர் ஃபிரண்ட் அமைப்புக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை மற்றும் தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
ஆப்ரேஷன் ஆக்டோபஸ் என்ற பெயரில் ஆந்திரா, அசாம், டெல்லி, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் நாடு முழுவதும் 106 பேர் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்தது, பயிற்சி முகாம்கள் அமைத்து அடிப்படைவாத சிந்தனை உடையவர்களை தடை செய்யப்பட்ட இயக்கங்களில் சேர வைப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் கைதாகினர்.
இந்த சோதனைக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி அதிலும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்நிலையில் ஆப்ரேஷன் ஆக்டோபஸ் இரண்டாம் கட்டமாக இன்றும் பல்வேறு மாநிலங்களில் தேசிய புலானய்வு முகமை, மாநில சிறப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், தெலங்கானா, அசாம், கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட சோதனையில் தற்போது வரை 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதால் டெல்லியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு போராட்டம் எதிலும் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அப்பகுதியில் நவம்பர் 11ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
newstm.in