இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சமீபத்தில் பெய்த மழையினால் காரணமாக 1,009 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய கணிப்பில் 2,800 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் ஜூன் மாத மத்திக்கு பிறகு, பருவநிலை மாற்றம் காரணமாக அதிகனமழை பெய்தது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது. வெள்ளம் காரணமாக 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரகணக்கானோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் அந்நாட்டில் வறுமை 5 சதவீதம் அதிகரித்துள்ளது. 90 லட்சம் முதல் 1.2 கோடி பேர் வரை வறுமைக்கு தள்ளப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. 18 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை வேலை இழக்கும் சூழல் உள்ள நிலையில், கடுமையான நிதி நெருக்கடி தவிக்கும் மத்தியிலும் பணவீக்கம் மேலும் 25 சதவீதம் அதிகரிக்கும் என அந்நாட்டின் திட்ட கமிஷன் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில் தேவை குறைவு காரணமாகவும், அரிசி, பருத்தி, பழங்கம் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி குறையும் காரணமாக, இந்த நிதியாண்டில் பாகிஸ்தானின் ஏற்றுமதியில் 300 கோடி டாலர் இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது. பருத்தி, கோதுமை, காய்கறிகள் இறக்குமதியும் அதிகரிக்கக்கூடும்.
முன்பு, இந்த நிதியாண்டில் விவசாய வளர்ச்சி 3.9 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது வெள்ளம் காரணமாக மைனஸ் 0.7 முதல் மைனஸ் 2.1 சதவீதமாக சுருங்கும் எனவும், விவசாயத்துறையில் 3.5 முதல் 4.5 சதவீத இழப்பு ஏற்படும் எனவும் தெரியவந்துள்ளது.
இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்டெடுக்க, நீண்ட கால கட்டுமானங்கள் தேவைப்படுவதும், அதன் மூலம் அந்த மாவட்டங்கள் மீண்டு வருவதற்கு 2 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகலாம் எனவும் பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
மழை, வெள்ளத்திற்கு அதிகம் சிந்து மாகாணம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 590 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பஞ்சாப் மாகாணத்தில் 55 கோடி டாலர், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 54 கோடி டாலர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2 கோடி டாலர், கில்ஜித் பல்டிஸ்தானில் 3 கோடி பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக திட்ட கமிஷன் தலைவர் கூறியுள்ளார்.
நன்கொடையாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் நடந்த ஆலோசனையில் பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட இழப்பு முன்பு 1,009 கோடி டாலர் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது அது 2,800 கோடி டாலர் ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய தகவல்படி, பாகிஸ்தான் அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு 290 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக ரயில்வே துறைக்கு 24 கோடி டாலர், வீட்டு வசதி வாரியத்துறைக்கு 2 கோடி டாலர், நெடுஞ்சாலை துறைக்கு 2 கோடி டாலர், நீர் மேலாண்மை துறைக்கு 29 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய தரவுகளின்படி பாகிஸ்தான் உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு 400 கோடி டாலர் தேவைப்படுகிறது. இழப்பு 2,800 கோடி டாலர் ஆக கணிக்கப்பட்டுள்ள நிலையில் 1,100 டாலர் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தி, அரிசி, சோளம் மற்றும் கரும்பு உற்பத்தி மோசமான அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 3.3 கோடி பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
சாலைகள், ரயில் தண்டவாளங்கள், பாலங்கள், நெடுஞ்சாலைத்துறை, விவசாய நிலங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏழு பாகிஸ்தானியர்களில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிய முதல் பெரிய விலங்குகள் என 10 லட்சம் விலங்குகள் உயிரிழந்துள்ளன.
விவசாயத்துறையில் ஏற்பட்ட இழப்பு காரணமாக தொழில்துறையும் பாதிப்பை சந்திக்கக்கூடும். இந்த நிதியாண்டிற்கான உள்நாட்டு மொத்த வளர்ச்சியானது 1.8 முதல் 2.3 சதவீதம் வரை மட்டுமே இருக்கும் எனவும் 2.4 டிரில்லியன் வருமான இழப்பு ஏற்படும் எனவும் புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளதாக அந்நாட்டு நாளிதழ்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்