சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பது இல்லை என்று சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, புலன் விசாரணையை விரைந்து மேற்கொண்டு விரைவில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி கோரிக்கை விடுத்த நிலையில், வழக்கு தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருவதால் இந்த மனுவை ஏன் முடித்து வைக்க கூடாது?” என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை கண்காணித்து வருகிறது. ஏற்கெனவே இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், வழக்கு தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பான வீடியோ காட்சிகள் அடங்கிய குறுந்தட்டை தங்களுக்கு வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
அப்போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், “ஏற்கெனவே இந்த வழக்கின் புலன் விசாரணை முடியும் வரை வழக்கு தொடர்பான ஆவணங்களை மாணவியின் பெற்றோர் தரப்புக்கு வழங்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் புலன் விசாரணைக்கு மாணவியின் பெற்றோர் ஒத்துழைக்க மறுக்கின்றனர். விடுதியில் மாணவி பயன்படுத்திய மொபைல் ஃபோனை வழங்கவும், மரபணு சோதனைக்கு மாதிரிகள் வழங்கவும் பெற்றோர் மறுப்பு தெரிவிக்கின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவி செல்போன் பயன்படுத்தி இருந்தால், அதை புலன் விசாரணை செய்யும் சிபிசிஐடி போலீசாரிடம் வழங்க வேண்டும் என மாணவியின் பெற்றோருக்கு உத்தரவிட்டார். விசாரணையின் முன்னேற்றம் குறித்து அடுத்த அறிக்கையை அக்டோபர் 30-ம் தேதி தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.