நாகை வடக்கு மாவட்ட (மயிலாடுதுறை) தி.மு.க பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நிவேதா முருகன், தற்போது பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ ஆகவும் இருக்கிறார். இவர் மாவட்டக் குழுவை கூட்டி, தன்னை தலைமை மாவட்டச் செயலாளராக அறிவிக்கவுள்ளதாகவும், தன்னை ஏக மனதாக தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றி தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஆனால், அதை முன்னணியினர் நிராகரித்துவிட்டனர். அதையடுத்து மாவட்டச் செயலாளர் பதவிக்கு நிவேதா முருகனை எதிர்த்து குத்தாலம் கல்யாணம், முத்து தேவேந்திரன், மூவலூர் மூர்த்தி, கொள்ளிடம் ரவிக்குமார், பெருமங்கலம் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் அருள்செல்வன், ஜெகவீரபாண்டியன் என 7 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் போட்டியில்லாமல் சுமுக உடன்பாடு எட்ட அமைச்சர் கே.என்.நேரு, அன்பகம் கலை தலைமையிலான நிர்வாகிகள் இவர்கள் அனைவரையும் அழைத்து நேர்காணல் நடத்தியிருக்கிறார்கள். அங்கு நடந்ததென்ன என்பது குறித்து திமுக வட்டத்தில் விசாரித்தோம்.
நம்மிடம் பேசியவர்கள், “நேர்காணலில், `நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்று நேரு ஆரம்பித்தார். எல்லோரும் அமைதியாக இருக்க ஜெகவீரபாண்டியன் எழுந்து, `இதனை நீங்கள் முன்கூட்டியே அறிவித்திருந்தால் நாங்கள் இவ்வளவு தூரம் வந்து செலவு செய்துகொண்டு அலைந்துக் கொண்டிருக்க தேவையில்லை. இதுவரை நான் எந்த பதவியும் கேட்டதில்லை. எனக்கு மாவட்டச் செயலாளர் பதவி தந்தால் மிகச் சிறப்பாக கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்’ என்றார்.
அடுத்து வழக்கறிஞர் புகழரசன், `கலைஞர் உதவித்தொகை திட்டம் என்ற பெயரில் 2019-ம் ஆண்டு முதல் என் சொந்தச் செலவில் நலிவடைந்த கழகத்தினருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறேன். ஆண்டுதோறும் பெரிய விழா எடுத்து லட்ச ரூபாய் செலவழித்து நலத்திட்ட உதவிகள் வழங்குகிறேன். நிவேதா முருகனைத்தவிர வேறு யாருக்கு பதவிக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறோம். அப்போதுதான் கட்சி வளர்ச்சி பெறும்’ என்று கூறி முடித்தார்.
`சரி.. சரி உங்கள் கருத்துகளை தலைமையின் பார்வைக்கு வைக்கிறோம். அவர்கள் மாவட்டச் செயலாளர் யார் என்பதை முடிவு செய்யட்டும். தற்போது 15 பேர் கொண்ட மாவட்ட கமிட்டியை முடிவு செய்யலாம்’ என்று நேரு கூறினார். அதையடுத்து, மாவட்டப் பொருளாளர் பதவிக்கு ரவி என்பவரை பரிந்துரை செய்தார் நிவேதா முருகன்.
உடனே முத்து தேவேந்திரன் எழுந்து, `அவர் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டவர். சீர்காழி சேர்மன் பதவியை தி.மு.க அடைந்துவிடக்கூடாது என்பதற்கு குறுக்கே நின்றவர். எல்லாவற்றுக்கும் மேலாக துர்கா அம்மா வீட்டு வாசலில் ஆர்ப்பாட்டம் செய்தவர். அப்படிப்பட்டவரை நியமித்தால் நான் இப்போதே இங்கேயே தீக்குளிப்பேன்’ என்று குமுறியிருக்கிறார்.
நிவேதா முருகனை எதிர்த்து வேட்புமனு தாக்கல்செய்த ஏழு பேருமே, `நிவேதா முருகனுக்கு மா.செ பதவி வழங்கக்கூடாது’ என்பதை குழுவிடம் உறுதிபடக் கூறினார்கள். அதையடுத்து, நேர்காணலில் நடந்த வாத, பிரதிவாதங்கள் அனைத்தும் தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு முடிவு எட்டப்படும் என்று கூறிய குழுவினர் நேர்காணலை முடித்துக்கொண்டனர்” என்றனர்.