புதுச்சேரியில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.கவினர் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் வழக்கம் போல் கடைகள் திறந்திருந்தது. பொதுமக்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டனர்.
இதனால் ஆவேசமடைந்த பா.ஜ.கவினர் கடைகளைத் திறந்த உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உப்பளத்தில் தனியார் பள்ளிக்கு மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்திருந்தனர். அங்கு வந்த பா.ஜ.கவினர் பள்ளியை மூடுமாறு வலியுறுத்தினர்.
தேர்வு நடைபெறுவதால் பள்ளிக்கு விடுமுறை விடமுடியாது என்று பள்ளி நிர்வாகம் கூறியது. இதைப்பார்த்த பெற்றோர்களும், பொதுமக்களும் உடனே ‘பள்ளியை விட்டு வெளியே போ, வெளியே போ’ என முழக்கம் எழுப்பினர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் பா.ஜ.கவினரை பள்ளியிலிருந்து வெளியேற்றினர். இதையடுத்து பள்ளி வழக்கம்போல் செயல்படத் தொடங்கியது.
இதனிடையே 5 தமிழ்நாடு அரசு பேருந்துகள் மற்றும் ஒரு தனியார் கல்லூரி பேருந்து என 6 பேருந்துகளின் கண்ணாடிகளை இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.க-வினர் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
புதுச்சேரி முழுவதும் இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.கவினர் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். போலிஸார் உரிய பாதுகாப்பு அளிக்காததால், சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளது.
newstm.in