எரிசக்தி, டேட்டா உள்ளிட்ட துறைகளில் அடுத்த 10 ஆண்டுகளில் 8 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக பிரபல தொழிலதிபரும் உலகின் 2ஆவது பெரிய பணக்காரருமான கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.
8 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 70 சதவிகிதத்தை மாற்று எரிசக்தி துறைக்கு ஒதுக்கீடு செய்யப்போவதாக கவுதம் அதானி கூறியுள்ளார். தற்போது மரபுசாரா எரிசக்தி பிரிவில் 20 கிகாவாட் உற்பத்தி செய்து வரும் நிலையில் அதை 45 கிகாவாட்டாக உயர்த்த உள்ளதாகவும் இதற்காக தாங்கள் பயன்படுத்த உள்ள நிலம் சிங்கப்பூரை விட அதிக பரப்பு கொண்டதாக இருக்கும் என்றும் அதானி கூறினார்.
“எரிசக்தி, டேட்டா உள்ளிட்ட துறைகளில் அடுத்த 10 ஆண்டுகளில் 8 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளோம். 8 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 70 சதவிகிதத்தை மாற்று எரிசக்தி துறைக்கு ஒதுக்கீடு செய்ய உள்ளோம். எரிசக்திக்கு அடுத்தபடியாக இந்தியாவில் மிகப்பெரிய ஏற்றம் கண்டு வரும் டேட்டா துறையிலும் தாங்கள் அதிக கவனம் செலுத்த உள்ளோம்.
வளர்ந்து வரும் தேசியவாதம், விநியோகச் சங்கிலிகளின் மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவை அச்சுறுத்துவதால் அந்நாடு பெருகிய முறையில் தனிமைப்படுத்தப்பட்டதாக உணரும். மேலும் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்துவதன் மூலம் “நினைக்க முடியாததை” செய்கின்றன. ஆனால் அவை பொருளாதாரத்தை மந்தநிலைக்குள் தள்ளும்.” என்று அதானி சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM