கடல் நீர்மட்டம் தாழ்வு எதிரொலி கன்னியாகுமரியில் இன்று படகு போக்குவரத்து தாமதம்; டிக்கெட் வாங்க வெயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் பல்வேறு சிறப்பு மிக்க பகுதிகள் உள்ளன. முக்கடல் சங்கமம், சூரிய உதயம் மற்றும் மறையும் காட்சி, பகவதி அம்மன் கோயில், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்ப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.
கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்க்க வசதியாக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தினந்தோறும் காலை 8 மணிக்கு டிக்கெட் வழங்கப்பட்டு 8.30 மணி முதல் போக்குவரத்து தொடங்குகிறது. ஆனால் அவ்வப்போது கடல் நீர்மட்டம் திடீரென்று தாழ்வடையும். அப்போது படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கும்.

அந்த வகையில் இன்று அதிகாலை திடீரென்று கடல் நீர்மட்டம் குறைந்தது. இதனால் படகுகள் தரை தட்டி நின்றது. கடல் நீர்மட்டம் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பிய பின்னர் 9.30 மணிக்கு படகுகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் டிக்கெட் வாங்குவதற்காக வந்த சுற்றுலா பயணிகள் காலை முதல் நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்து நின்றனர்.
காலையிலேயே வெயில் சுட்டெரித்ததால் தலையில் கைக்குட்டை, துப்பட்டா மற்றும் துண்டு போட்டபடி நின்றதை பார்க்க முடிந்தது. கடல் நீர்மட்டம் இயல்புநிலைக்கு திரும்பிய பிறகு ஒரு மணி நேரம் தாமதமாக 9.30 மணியளவில் மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.