மதுரை: தமிழக காவல் துறையில் அதிகாரி முதல் காவலர்கள் என சுமார் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். போலீஸ் பற்றாக் குறையைத் தொடர்ந்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் புதிதாக 2-ம் நிலை காவலர்கள், எஸ்.ஐ.-க்கள், தேர்வாணையம் மூலம் டிஎஸ்பிக்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நடைமுறையில் உள்ளது.
கடந்த 1993-ல் சுமார் 10 ஆயிரம் இரண்டாம் நிலை காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு பேட்ஜ், பேட்ஜாக 1995 வரை பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களில் பிற வேலைக்குச் சென்றவர்கள், பிரச்சினையில் சிக்கி வேலையிழந்தவர்கள் ஆகியோரைத் தவிர சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் தற்போது பதவி உயர்வு பெற்று பல காவல் நிலையங்களில் சிறப்பு எஸ்.ஐ.-க்களாகப் பணிபுரிகின்றனர். இவர்கள் 25 ஆண்டுக்கு மேல் பணி அனுபவம் பெற்றிருந்தாலும், 6 மாதம் பயிற்சி முடித்தால் மட்டுமே நேரடி எஸ்.ஐ. போன்று பணியைத் தொடர முடியும். இல்லையெனில் ஏட்டு அந்தஸ்தில் வைக்கப்படுவர். பெரும்பாலும், இவர்களுக்கு வழக்கு விசாரணை அதிகாரி அல்லது முக்கியப் பணிக்கு வாய்ப்பு அளிக்கப்படாது.
இதுபோன்ற சூழலில் 45 வயதை கடந்த சிறப்பு எஸ்.ஐ.-க்களுக்கு விரைவில் பயிற்சி அளித்தால் எஸ்.ஐ.-க்களாகி அடுத்த 10 ஆண்டுகளில் ஆய்வாளர் பதவி உயர்வைப் பெற முடியும். சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் எஸ்.ஐ.-க்கள், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மூலம் டிஎஸ்பிக்கள் தேர்ந்தெடுக்கப்படுவதால் பாதிக்கப்படுகிறோம். சிறப்பு எஸ்.ஐ.யாக பதவி உயர்வு பெற்ற ஓரிரு ஆண்டில் 6 மாத பயிற்சி அளிக்க நடவடிக்கை தேவை என சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘எங்களுடன் பணியில் சேர்ந்து சென்னை மற்றும் ரயில்வே காவல் நிலையங்களில் பதவி உயர்வு பெற்ற சிறப்பு எஸ்ஐக்கள் 6 மாத பயிற்சிக்கு அழைக்கப்பட்டு முடித்துள்ளனர். மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலுள்ள சிறப்பு எஸ்.ஐ.-க்களுக்கு பயிற்சி தாமதமாகிறது. இதனால் ஆய்வாளர் பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். காவல் துறையில் எஸ்.ஐ. முதல் ஒவ்வொரு நிலையிலும் உரிய காலத்தில் பதவி உயர்வு அளிக்கவேண்டும்’’என்றனர்.