திருமலை: ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பதி திருமலை இடையே 10 மின்சார பேருந்து சேவையை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். திருமலை – திருப்பதியை மையமாக கொண்டு முதல் முறையாக மின்சார பேருந்துகளை ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் 100 மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈவே டிரான்ஸ் லிமிடெட் என்கிற தனியார் நிறுவனம் இதற்கான ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில் மலைப்பாதையில் சோதனை ஓட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரம்மோற்சவத்தையொட்டி 10 மின்சார பேருந்துகளை முதல்வர் ஜெகன் மோகன் தொடங்கி வைத்தார். டிசம்பர் மாதத்திற்குள் 100 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதில் திருப்பதி மலைப்பாதை சாலையில் 50 பேருந்துகள் அலிபிரி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது. மேலும், ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலைக்கு 14 பேருந்துகளும், திருப்பதியில் இருந்து மதனப்பள்ளிக்கு 12 பேருந்துகளும், திருப்பதியில் இருந்து நெல்லூருக்கு 12 பேருந்துகளும், கடப்பாவுக்கு 12 பேருந்துகளும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தம் பெற்றுள்ள எவே டிரான்ஸ் நிறுவனம், 12 ஆண்டுகளுக்கு இவற்றை நிர்வகிக்க உள்ளது. டிசல் பேருந்துகளுக்கு மாற்றாக மின்சார பேருந்து இயக்கப்பட உள்ளதால் சுற்று சூழல் மாசு ஏற்படுத்தும் கார்பன் உமிழ்வை வெளியேற்றும் மாசுப கட்டுப்படுத்த முடியும்.
100 மின்சார பேருந்துகள் இயக்கப்படுவதால் கார்பன் வெளியேறுவது ஆண்டுக்கு 5,100 மெட்ரிக் டன் குறைக்க முடியும். ஏ.சி. பேருந்தின் மூலம் டிசல் கிலோமீட்டருக்கு ரூ.28.75 செலவாகும், அதே மின்சார பேருந்தின் பயன்பாட்டின் மூலம் கிலோமீட்டருக்கு ரூ.7.70 மட்டுமே செலவாகும். வரும் நாட்களில் மின்சார பேட்டரிகளின் விலை குறையும் என்பதால் பராமரிப்பு செலவு மேலும் குறைய வாய்ப்புள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.